சென்னை: உயர் கல்வித் துறை முன்னாள்அமைச்சர் கே.பி. அன்பழகன் வீடு, அவருக்குத் தொடர்புடைய சென்னை, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் உள்ளிட்ட 57 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை அலுவலர்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாக கே.பி. அன்பழகனின் மனைவி மல்லிகா, மகன்கள் சசிமோகன், சந்திரமோகன், மருமகள் வைஷ்ணவி ஆகியோர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் சென்னை நுங்கம்பாக்கம் கிரீன் மெடோஸ் சாலையில் அமைந்துள்ள அன்பழகனின் உறவினரான சிவகுமார் வீட்டில் நடைபெறக்கூடிய சோதனையைப் பார்வையிட முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வந்தார்.
அதன்பின்னர் செய்தியாளரைச் சந்தித்த அவர், ஆட்சிப் பொறுப்புக்கு வந்தவுடன் அதிமுகவை அழித்துவிட வேண்டும் நோக்கிலும், அவதூறு பரப்ப வேண்டும் என்ற நோக்கிலும் விடியா திமுக அரசு இது போன்ற செயலில் ஈடுபட்டுவருவதாகத் தெரிவித்துள்ளார்.
அதிமுகவை அழித்துவிட வேண்டும் நோக்கத்தில் விடியா திமுக அரசு செயல்படுகிறது - ஜெயக்குமார் மேலும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் விரைவில் நடக்கவிருப்பதால், அதிமுக அமைச்சர்கள் ஊழல்வாதிகள் என்ற மாயபிம்பத்தை மக்கள் மனதில் ஏற்படுத்த காவல் துறையை திமுக அரசு ஏவிவிட்டு சோதனை நடத்துவதாகக் குற்றஞ்சாட்டியுள்ளார்.
குறிப்பாகப் பொங்கல் பண்டிகையை ஒட்டி திமுக அரசு வழங்கிய பரிசுப் பொருள்கள் தரமற்று கிடந்ததாகவும், பொதுமக்கள் குப்பைத் தொட்டியில் கொட்டும் அளவுக்கு இருந்ததால் அதை மறைக்கச் சோதனையை மேற்கொள்வதாக அவர் தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் ஸ்டாலினுக்குத் திராணி இருந்தால் சட்டப்பேரவையைக் கலைத்துவிட்டு மீண்டும் தேர்தலை நடத்தினால் ஒரு இடத்தில்கூட திமுக வெற்றிபெற முடியாது எனச் சவால் விடும் வகையில் தெரிவித்துள்ளார். திமுக அரசு குறித்து யார் கருத்து தெரிவித்தாலும் காவல் துறையை ஏவி சோதனை என்ற பெயரில் மிரட்டுவதாகவும், கருத்துச் சுதந்திரம் பறிபோகி இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் எப்போது வேண்டுமானாலும் எங்கள் வீட்டிற்கு லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் சோதனைக்கு வரலாம் என அவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் வீட்டில் சோதனை; கணக்கில் வராத ரூ.11.32 கோடி