சென்னை: அதிமுக பொதுக்குழு கூட்டம் ஜூலை 11 ஆம் தேதி சென்னை வானகரத்தில் மீண்டும் நடைபெறவுள்ளது. இந்த பொதுக்குழுவிற்கு உரிய காவல்துறை பாதுகாப்பு வழங்கக்கோரி அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார் மற்றும் பெஞ்சமின் ஆகியோர் தமிழ்நாடு காவல்துறை டிஜிபி அலுவலகத்தில் இன்று மனு அளித்தனர்.
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “வருகிற ஜூலை 11 ஆம் தேதி அதிமுக பொதுக்குழு நடைபெற உள்ளது. அதனால் காவல்துறையினரின் பாதுகாப்பு கோரி டிஜிபியிடம் மனு அளித்துள்ளோம். கடந்த 23 ஆம் தேதி அன்று நடந்த பொதுக்குழுவிற்கு, காவல்துறை உரிய பாதுகாப்பை அளிக்க தவறி விட்டது.
11 ஆம் தேதி நடைபெறவுள்ள பொதுக்குழுவில், 2,665 பொதுக்குழு உறுப்பினர்கள் பங்கேற்கவுள்ளனர். முன்னாள் அமைச்சர்கள் உள்பட 65 எம்எல்ஏக்கள், 5 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மேலவை உறுப்பினர்கள் ஆகியோர் பங்கேற்கவுள்ளனர். இந்த பொதுக்குழு சட்ட ரீதியாக நடைபெற உள்ளது. எனவே காவல்துறை முழுமையாக பாதுகாப்பு வழங்க வேண்டும்.
சமூக விரோதிகள் பொதுக்குழு நடத்த விடாமல் தடுக்க வாய்ப்பு இருப்பது குறித்தும் டிஜிபியிடம் எடுத்துச் சொல்லி உள்ளோம். பொதுக்குழுவிற்கு வெளியே சமூக விரோதிகள் வரலாம். அவர்களை வராமல் தடுக்க வேண்டும். இதற்காக எதிர்தரப்பினர்தான் திட்டமிட்டு வருகின்றனர்.