சென்னை: முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார் மற்றும் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் இன்று (ஜூலை 04) எழும்பூரில் உள்ள அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில், வலது கை மூட்டுப் பகுதிக்கு மேல் வரை அகற்றப்பட்டு சிகிச்சைப் பெற்று வரும் ஒன்றரை வயது குழந்தையை நேரில் சந்தித்தனர். மருத்துவ சிகிச்சைகள் குறித்து குழந்தையின் பெற்றோரிடம் கேட்டு அறிந்து, நலம் விசாரித்தனர்.
திமுக ஆட்சியில் மக்களின் நம்பிக்கை போனது:பின்னர், அவர்கள் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், "அதிமுக ஆட்சியில் தமிழ்நாடு, மருத்துவத்தில் வெல்த் மாநிலமாக இருந்தது. தமிழ்நாட்டில் சென்னை மருத்துவத் தலைநகராக விளங்கியது. திமுகவின் இரண்டு ஆண்டு ஆட்சியில் மருத்துவத்துறை மோசமாக உள்ளது. ஆனால், அதிமுக ஆட்சி காலத்தில் மருத்துவத்துறை மிகப் பெரிய வளர்ச்சி அடைந்தது. மருத்துவர்கள் உணவின்றி உறக்கமின்றிஅரசின் எண்ணங்களை 24 மணி நேரமும் நிறைவேற்றினர். அதிமுக ஆட்சி காலத்தில் அரசு மருத்துவமனை மீது மக்களுக்கு நம்பிக்கை இருந்தது. ஆனால், திமுக ஆட்சியில் மக்களுக்கு அரசு மருத்துவமனை மீது நம்பிக்கை கிடையாது.
அடுத்தடுத்து நடக்கும் தவறான சிகிச்சை; அமைச்சர் என்ன செய்கிறார்?:வடசென்னையைச் சேர்ந்த பிரியா என்ற மாணவிக்கு தவறான சிகிச்சை வழங்கப்பட்டதால் உயிரிழந்த நிகழ்வு இரண்டு மாதத்திற்கு முன் நடந்தது. குழந்தைகள் நல மருத்துவமனையில் தலைமை காவலரின் மகளுக்கு தவறான சிகிச்சை வழங்கப்பட்டதால் குழந்தையின் கால் செயல் இழந்தது. இதைத்தொடர்ந்து அரசு மருத்துவமனைகளில் தவறான சிகிச்சையின் காரணமாக, இது போன்ற மோசமான நிகழ்வுகள் நடைபெற்ற வருகின்றன. இத்தைகைய தவறான சிகிச்சையின் காரணமாக, 2 ஆண்டுகளில் நிறைய பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இத்துறை அமைச்சர் முழுமையான கவனம் செலுத்துவதன் மூலம் எந்த பிரச்னையும் வர வாய்ப்பு கிடையாது.
தாயின் கருத்தை கொச்சைப்படுத்துவதா?:ஆனால், அமைச்சர் சுப்பிரமணியன் முழுமையாக அக்கறை எடுத்து குழந்தைக்கு சிகிச்சை செய்திருந்தால், கை இழந்து இருக்கக்கூடிய நிலைமை ஏற்பட்டு இருக்காது என்று குற்றம் சாட்டினார். அந்த குழந்தையின் தாயின் கருத்தை கொச்சைப்படுத்தும் வகையில் அமைச்சர் பதில் கூறியுள்ளதாகவும், இது போன்ற சூழல் வரும் பொழுது நடவடிக்கைகளை அரசு முன்னால் எடுக்க வேண்டும் என்றும் விழிப்போடு இருந்தால் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
செந்தில் பாலாஜியை பார்க்க பிற அமைச்சர்கள் உண்டு; ஏழைகளைப் பார்க்க யாருண்டு?:தற்போது அமைத்துள்ள 3 பேர் குழு அறிக்கை கொடுத்தால் அந்த குழந்தைக்கு கை கிடைத்துவிடுமா? என்று அவர் கேள்வியெழுப்பி உள்ளார். குழந்தையின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு 50 லட்சம் ரூபாய் அரசு நிதி வழங்க வேண்டும் என்று அவர் வலிறுத்தியுள்ளார். இதனிடையே, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த செந்தில் பாலாஜியை, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் தினந்தோறும் சென்று பார்த்து வந்ததாக கூறிய அவர், அரசு மருத்துவமனைக்கு வரும் ஏழை எளிய மக்களுக்கு முறையான சிகிச்சை வழங்கப்படுகிறதா? என்பதை பார்க்கத் தவறிவிட்டதாகவும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடுமையாக குற்றம்சாட்டினார்.