தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ரூ.25 லட்சம் கொடுத்தபோது ஒரு கோடி கேட்டீர்கள், இப்போது ஒரு கோடி கொடுக்க மறுப்பதேன்? மு.க. ஸ்டாலினுக்கு ஜெயக்குமார் கேள்வி - ADMK Party

சசிகலா இல்லாமல் அதிமுக இப்போது போல் எப்போதும் தொடரும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

By

Published : Jun 9, 2021, 5:14 PM IST

சென்னை: “மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. சட்ட வழிமுறைகளை பின்பற்றி அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறும்” எனவும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “அதிமுகவில் எந்தவித சலசலப்பும் இல்லை. கடந்த முறை சட்டப்பேரவை உறுப்பினர் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி எதிர்க்கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதேபோன்று எந்தவித சலசலப்பும் இன்றி பரபரப்பும் இன்றி மற்ற நிர்வாகிகள் நியமனமும் வருகின்ற சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டத்தில் நடைபெறும். அதிமுகவின் விதிகளை மீறி செயல்பட்டால், ஒருங்கிணைப்பாளரும் இணை ஒருங்கிணைப்பாளருக்கும் விதிமீறல் என தெரியும் பட்சத்தில், நடவடிக்கை என்பதை தவிர்க்க முடியாது. ராணுவ கட்டுப்பாட்டோடு இயங்கும் இயக்கம் அதிமுக.

சசிகலா தனது தொண்டர்களிடம் பேசும் ஆடியோவில் மீண்டும் கண்டிப்பாக வருவேன் என தெரிவித்துள்ளார். எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே முதலமைச்சராக இருந்தபோது தெரிவித்ததன் படி, 100 விழுக்காடு அவர் வர வாய்ப்பில்லை.

அதேபோன்று துணை ஒருங்கிணைப்பாளர் கேபி முனுசாமி தெரிவிக்கும்போதும், சசிகலா கட்சியில் இல்லை மற்றும் தொண்டர் என பேசியவரும் கட்சியில் இல்லை என்று தெளிவாக தெரிவித்து இருக்கிறார். தலைமை கழகத்திலும் மீண்டும் அவர் வர வாய்பில்லை என எடப்பாடி பழனிச்சாமி தெளிவாக கூறியுள்ளார். சசிகலா இல்லாமல் அதிமுக இப்போது போல் எப்போதும் தொடரும்.

உச்சநீதிமன்றத்திலும் தேர்தல் ஆணையத்திடம் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தலைமையில் அதிமுக செயல்படும் என்று சான்றிதழ் கொடுக்கும் வகையில், முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் சட்ட நடவடிக்கை எடுத்துள்ளார். நாட்டின் உச்சபட்ச அமைப்பான உச்சநீதிமன்றமே தெரிவித்த பிறகு இதை விட வேறு என்ன வேண்டும். அதிமுக பொதுச் செயலாளர் பதவிக்கு யாரையும் 100 விழுக்காடு சேர்க்க மாட்டோம். எங்களது நிரந்தர பொதுச் செயலாளர் மறைந்த முதலமச்சர் ஜெயலலிதா தான்.

நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக, திமுகவிற்கு இடையே வாக்கு வித்தியாசம் மூன்று விழுக்காடு தான். சுமார் ஒன்றரை கோடி மக்கள் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தலைமையை ஏற்றுக் கொண்டதால் தான் வாக்களித்துள்ளனர். வெற்றி, தோல்வியை அடிப்படையாக வைத்து ஒற்றை தலைமை வேண்டும் என அதிமுக தொண்டர்கள் எதிர்பார்ப்பதாக கூறப்படுவது போன்று எந்தக் கருத்தும் இல்லை.

தடுப்பூசி குறித்து ஏற்கனவே எடப்பாடி பழனிசாமி பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். மத்திய அரசை குறை கூறாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும். பல இடங்களில் தடுப்பூசி தட்டுப்பாடாக உள்ளது. திமுகவின் 39 நாடாளுமன்ற உறுப்பினர்களை வைத்து மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து தடுப்பூசிகளை பெற வேண்டும். கடிதம் எழுதுவது மட்டுமே போதாது.

கரோனா தொற்றால் 400 பேர் என்ற அளிவில் உயிரிழப்பு ஏற்படுவது கவலை அளிக்கக் கூடிய விஷயமாக உள்ளது. கரோனா தொற்றுப் பரவலை 30 ஆயிரத்திலிருந்து 15,000 ஆக குறைப்பதாக கூறினாலும், உயிரிழப்புகளின் எண்ணிக்கை என்பது அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது.

ஊரடங்கு முறையாக அமல்படுத்தவில்லை, திறமை இல்லாத நிர்வாகம் செயல்படுவதாக அரசை உயர் நீதிமன்றமே சுட்டிக் காட்டுகிறது. அரசு வீண் விளம்பரங்களை தவிர்த்து உண்மை நிலையை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும். எங்களது ஆட்சியில் கரோனா தொற்று காரணமாக கடந்த ஒரு வருடத்தில் 100 பேர் இறந்துள்ளார்கள் என்றால், திமுக ஆட்சியில் ஒரே மாதத்தில் 400 பேர் இறந்துள்ளனர். உயிரிழப்பு தொடர்பாக கணக்கெடுப்பு செய்து ஆன்லைனில் திமுக வெளியிடவில்லை.

அறிஞர் அண்ணா தெரிவித்தது போல், நாங்கள் எதிரி கட்சியல்ல எதிர்க்கட்சி. அரசு எடுக்கும் நல்ல செயல்களுக்கு ஆதரவு உண்டு. அதே நேரத்தில் அரசு திசைமாறி செல்லும்போது சுட்டிக்காட்டும் கடமை இருக்கிறது . சில நல்ல விஷயங்கள் செய்யும் போது ஒருங்கிணைப்பாளர் பாராட்டி இருப்பார். அதற்காக 100 விழுக்காடு சிறப்பாக செயல்படுவதாக கூறமுடியாது. கரோனா தொற்றால் இறந்தவர்களுக்கு, அதிமுக 25 லட்சம் ரூபாய் கொடுக்கும் போது ஒரு கோடி ரூபாய் கொடுக்க வேண்டும் எனத் திமுக தெரிவித்திருந்தது. தற்போது திமுக ஆட்சியில் இருக்கும்போது ஒரு கோடி ரூபாய் கொடுக்காதது ஏன்?

ஊரடங்கு முழுமையாக செயல்படவில்லை சென்னையில் ஆங்காங்கே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. அரசு முறையாக நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்ப்பது சரியல்ல. கரோனா தொற்றை பொறுத்தவரையில் அரசின் செயல்பாடு தங்களுக்கும் மக்களுக்கும் திருப்தி இல்லை” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: தனிமரமான 90's கிட்ஸ்- சட்டத்தை மாற்றிய சீனா!

ABOUT THE AUTHOR

...view details