சென்னை:சென்னையை அடுத்த புழல் பகுதியில் அதிமுக எம்ஜிஆர் மன்றம் சார்பில் எம்ஜிஆர் இலவச கணினி பயிற்சி மையம் மற்றும் இ சேவை மையத்தை முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் திறந்து வைத்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "ஒன்றரை கோடி மதிப்பில் இலவச கணினி பயிற்சி மையம் மாதவரம் மூர்த்தி ஏற்பாட்டில் திறந்து வைக்கப்படுகிறது. இதன் மூலம் மாணவ மாணவிகள் கணினி திறன் பெற்று வேலைவாய்ப்பை உறுதி செய்வதற்காக உதவியாக இருக்கும்.
திமுக ஆட்சியை விதி 356ஐ பயன்படுத்தி டிஸ்மிஸ் செய்தால் மக்கள் மகிழ்ச்சியடைவார்கள். டிஸ்மிஸ் ராசி திமுகவிற்கு அதிகமாக உள்ளது. துரியோதனன் வீழ்ந்தது சகுனி, துட்சாதணனால் தான். அதுபோல திமுகவில் பல சகுனி, துட்சாதணன்கள் உள்ளனர் அவர்களால் திமுக அழிந்துவிடும் என விமர்சனம் செய்தார்.
ஓபிஎஸ் நேற்று மாலை ஆதரவாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு, ஜூலை 1ஆம் தேதி மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவித்தது குறித்து பதிலளித்த முன்னாள் அமைச்சர் ஜெயகுமார், மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்கியவர்கள் நிலை என்ன ஆகும்? அதுபோல தான் ஓபிஎஸ்ஸை நம்பியவர்களின் நிலையும்.
திமுக அரசு 500 மதுக்கடைகளை மூடியது. அதில் தமிழ்நாட்டில் வருமானம் குறைவாக உள்ள கடைகள் மட்டுமே மூடப்பட்டுள்ளன. திமுக ஆட்சியில் இல்லாத போது மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும் என கோசமிட்டனர். ஆனால், ஆட்சிக்கு வந்ததும் மதுவிலக்கு குறித்து வாய் திறக்கவில்லை” என முதலமைச்சரையும், திமுகவையும் விமர்சனம் செய்தார்.