சென்னை:அதிமுகவின் 52-வது ஆண்டு தொடக்கவிழா இன்று அதிமுக தலைமை அலுவலகத்தில் கொண்டாடப்பட்டது. தொடர்ந்து மாவட்ட மேற்பார்வையாளர்கள் கூட்டம் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ராயபேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.
சட்டமன்றத் தொகுதிகளுக்கு உட்பட்ட பூத் வாரியாக, பூத் கமிட்டி அமைத்தல், இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை மற்றும் மகளிர் அமைப்புகளை ஏற்படுத்துதல் முதலான பணிகளை மேற்பார்வையிடுவதற்காக அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டப் பொறுப்பாளர்கள் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
ஆலோசனைக் கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “தமிழகத்தில் தற்போது ஆட்சி இருப்பது போலவே தெரியவில்லை. ஒரு பொம்மை முதலமைச்சர் போலதான் அவர் உள்ளார். மேலும், சட்ட ஒழுங்கை காப்பாற்ற காவல்துறையை கையாள்வது, பொதுமக்களுக்கு பாதுகாப்பு தருவது, தமிழகத்தில் தொடர்ந்து நடைபெற்று வரும் குழந்தை கடத்தலை தடுப்பது, இப்படி எதையுமே முதலமைச்சர் கட்டுபடுத்துவது போல தெரியவில்லை.
ஆளும் கட்சியின் மாமன்ற உறுப்பினருக்கே பாதுகாப்பு இல்லாத ஒரு சூழல்தான் இங்கு இருக்கிறது. மேலும், இப்போது தமிழகத்தை ஆள்வது ஒரு பொம்மை அரசு. குறிப்பாக பெண்கள், வயதானவர்கள் மட்டுமல்லாது பத்திரிகை துறையினருக்கே பாதுகாப்பு இல்லாத சூழல்தான் தமிழகத்தில் உள்ளது.
திரைப்பட துறையை பொருத்தவரை லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பணியாற்றுகிறார்கள். அதனால் அவர்களை சுதந்திரமாக செயல்படவிட வேண்டும். ஆனால் தற்போது திரைத்துறையை அச்சுறுத்தி, எந்த திரைப்படத்தை எடுத்தாலும் வெளியீடுக்கு எங்களிடம் தான் கொடுக்க வேண்டும் என்பது போன்று திரைத்துறையில் சர்வாதிகாரத்தை இந்த அரசு செய்து வருகிறது.
திரைதுறையினரும் இதை வெளிப்படையாக பேச வேண்டும். ஆனால், தற்போது வரை அவர்கள் மௌனம் காத்து வருவது எங்களுக்கே ஆச்சரியமாக உள்ளது. லியோ திரைப்படத்தை பொருத்தவரை நீதிமன்றம் சென்று இருக்கிறார்கள், என்ன தீர்ப்பு வருகிறது என்று பார்ப்போம். குறிப்பாக கடந்த அதிமுக ஆட்சியில் குழந்தை கடத்தல் எவ்வளவு இருந்தது, அதேபோல திமுக ஆட்சியில் குழந்தை கடத்தல் எவ்வளவு இருக்கிறது என ஒப்பிட்டு பாருங்கள் உங்களுக்கு விடை தெரியும்.
மேலும், தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் மட்டுமல்லாது பல்வேறு காய்ச்சல்கள் திமுக ஆட்சியில் மட்டும்தான் பரவி வருகிறது. துறையை கவனிக்க வேண்டிய சுகாதாரத்துறை அமைச்சரும் எப்படி செயல்படுகிறார் என அனைவருக்குமே தெரியும். அவர் ஓட்டப்பந்தயத்தில் கவனம் செலுத்துகிறாரே தவிர மக்கள் மீது கவனம் செலுத்தவில்லை. இலங்கை கடற்படையினரால் தினந்தோறும் மீனவர்கள் கைது செய்யும் நடவடிக்கை நடைபெற்று வருகிறது.
அதற்கு, அரசு தரப்பில் இருந்து மத்திய அரசுக்கு கடிதம் எழுதுவதை தவிர வேறு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது. குறிப்பாக நாடாளுமன்றத்தில் தமிழகம் சார்பாக 39 உறுப்பினர்கள் இருந்தும் மத்திய அரசுக்கு என்ன அழுத்தம் கொடுத்தார்கள். உரிய அழுத்தம் கொடுத்திருந்தால் மீனவர்கள் இப்போது வரை சிறையில் இருக்க வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டு இருக்க மாட்டார்கள்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: “திரையுலகம் செழிப்பாக இருக்க திமுக அரசுதான் காரணம்” - அமைச்சர் ரகுபதி