சென்னை: எடப்பாடி பழனிசாமி என்கிற நம்பிக்கை துரோகியை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் விமர்சனம் செய்திருந்தார். இதற்கு பதிலடியாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், "அதிமுக என்னும் மாபெரும் மக்கள் இயக்கத்தை திமுகவிடம் அடகு வைக்கவும், தனித் தன்மையை சீர்குலைக்கவும் முயலும் ஜீரோ பன்னீர்செல்வத்திற்கு கடும் கண்டனம்.
ஜெயலலிதா மறைவுக்குப் பின், ஓ.பன்னீர்செல்வத்தின் ஒவ்வொரு செயல்பாடுகளும் முட்டாளின் மூளையில் முன்னூறு பூ மலரும் என்பதை நிரூபிக்கும் வகையில் உள்ளன. அவரை உருவாக்கிய மாபெரும் இயக்கத்தை அழிக்க சதித் திட்டமிட்டு, நம் பரம்பரை எதிரி தீயசக்தி திமுகவோடு சேர்ந்து செயல்படும் துரோகி ஓ. பன்னீர்செல்வம்.
எடப்பாடி பழனிசாமி குறித்து ஓபிஎஸ் தனது அறிக்கையில் விரக்தியின் உச்சியில் உளறியுள்ளார். சட்டமன்றத்தில், ஜெயலலிதா அரசை எதிர்த்து வாக்களித்து துரோகம் செய்த பின், பதவி சுகத்திற்காக தேடி வந்த ஓ. பன்னீர்செல்வத்தை அரவணைத்து துணை முதலமைச்சராக மட்டுமல்ல, கட்சியின் ஒருங்கிணைப்பாளராகவும் ஆக்கியவர் எடப்பாடி பழனிசாமி.
உடனிருந்தே தொல்லை கொடுக்கும் வியாதி போல், பல்வேறு துரோகச் செயல்களில் ஈடுபட்டதையும் பொறுத்துக் கொண்டார். இந்த சுயநலவாதி திருந்துவார் என்று காத்திருந்த நிலையில், தன் மகனை, முதலமைச்சர் ஸ்டாலினை நேரில் சந்திக்க வைத்து, பாராட்டுப் பத்திரம் படிக்க வைத்து, சரணாகதி அடைந்ததை அறிந்த பின்புதான் எடப்பாடி பழனிசாமி முடிவு எடுத்தார்.
தீய சக்தி திமுக எதிர்ப்பு என்ற நமது தொப்புள் கொடி கொள்கையை சீர்குலைக்க, இந்த சுயநலவாதி முயன்றதை உணர்ந்ததால் தான் ஒட்டுமொத்த இயக்கமும் எடப்பாடி பின்னால் அணிவகுத்து நின்றது. வெறும் நான்கு பேருடன், வாயை வாடகைக்கு விடும் ஒருசிலரை மட்டுமே வைத்துக்கொண்டு, எடப்பாடியின் தனித் தன்மையை சீர்குலைக்க முயன்ற இவர், தன் நிலை அறியாமல், தன்னை மறந்து புத்தி தடுமாறி தாறுமாறாக உளறி வருகிறார்.