சென்னை: தனியார் நாளிதழ் நிறுவனர் ராமச்சந்திர ஆதித்தனாரின் 89வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அதன் அலுவலகத்தில் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டு உள்ள அவரது திருவுருவப் படத்திற்கு அதிமுக சார்பாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், "ராமச்சந்திர ஆதித்தனாரை பொறுத்தவரை பழகுவதற்கு இனிமையானவர், பண்பானவர்.
பெரிய பத்திரிக்கையாளர் என்ற ஒரு வகையில் எல்லோரிடமும் நல்ல மனதோடு ஒரு பண்பாளராக, பாச உணர்வுமிக்கவராக, ஒரு சகோதரராக பழகுகிற மாண்பை, ராமச்சந்திரா ஆதித்தனாரிடம் கண்டது உண்டு. அவரைப் பொறுத்தவரையில் பன்முகத் தன்மை கொண்டவர். விளையாட்டுத் துறையிலும், பத்திரிகை நடத்துவதிலும் அதேபோன்று ஆன்மீகம் என எல்லா துறையிலும் சிறந்து விளங்கியவர்" எனக் கூறினார்.
தொடர்ந்து பேசிய ஜெயக்குமார், "நாடாளுமன்றத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானம் வந்தபோது மோடியும், நிர்மலா சீதாராமனும் திமுகவை கிழி கிழி என கிழித்து உள்ளார்கள். திமுக அதிகார துஷ்பிரயோகம் செய்து கோடிக்கணக்கான கொள்ளை அடித்ததை, பிரதமர் பாராளுமன்றத்தில் பேசியது, தமிழ்நாடு அளவில் உலக புகழ் பெற்ற ஊழல் அரசாக திமுக திகழ்கிறது.
1989 ஆம் ஆண்டு கால கட்டத்தில் மார்ச் 25ஆம் தேதியில் ஜெயலலிதாவின் சேலையை பிடித்து இழுத்து, எவ்வளவு அவமானப்படுத்த முடியுமோ அந்த அளவுக்கு அவமானப்படுத்தி, கேவலப்படுத்தி இருப்பதை நாட்டு மக்கள் என்றும் மறந்துவிட முடியாது. அதற்கு தக்க பாடம் புகட்டுவதற்காக மீண்டும் சட்டமன்றத்தில் முதலமைச்சராக வந்து, பெரிய அளவுக்கு சாதனையை ஜெயலலிதா படைத்தார். பெண் என்றும் பாராமல் அவமானப்படுத்தி பெண்மையை இழிவுபடுத்திய திமுக அரசுக்கு அன்றைக்கே பாடம் கொடுத்தவர் ஜெயலலிதா.