சென்னை: காசிமேடு பகுதியில் சுனாமி 18ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு உயிர்நீத்தவர்களுக்கு அஞ்சலி செலுத்திய பின்னர் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய ஜெயக்குமார், "சுனாமியால் உயிர் நீர்த்த பொதுமக்கள், மீனவர்கள் என அத்தனைப் பேருக்குமே நினைவஞ்சலி செலுத்தும் வகையில், அதிமுக சார்பில் நினைவஞ்சலி செலுத்தப்பட்டது. சுனாமி என்ற வார்த்தையே உலகமே கேள்விப்படாத ஒன்று. 2004ஆம் ஆண்டு சுனாமியின் தாக்குதல் மிககொடுரமாக இருந்து ஆசிய நாடுகள், தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, மகாராஷ்ட போன்ற கடற்கரை பகுதிகளும் அதேபோல இலங்கை, இந்தோனேசிய போன்ற நாடுகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டது.
ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த காலத்தில் போர்க்கால நடவடிக்கையாக மீட்பு நடவடிக்கை எடுத்து, மறு வாழ்வு நடவடிக்கை நிவாரண நடவடிக்கை என அனைத்தும் முடுக்கிவிடப்பட்டு, உலக நாடுகளே வியக்கும் வகையில் சிறப்பான முறையில் செயல்பட்ட காரணத்தினால் மற்ற நாடுகள் கூட ஜெயலலிதாவின் ஆலோசனை பெறவேண்டும் என்பதற்காக அதிகாரிகளை எங்கள் நாட்டுக்கு அனுப்பவேண்டும் என்று சொல்லி இங்கிருந்து பல நாடுகளுக்கு அதிகாரிகள் சென்று பணியாற்றினார்கள்.
ஜெயலலிதாவின் ஆட்சிக் காலத்தில் அந்த அளவுக்குச் சுனாமியாக இருந்தாலும் சரி, இயற்கை இடர்பாடுகளாக இருந்தாலும் சரி புயலாக, மழையாக, வறட்சியாக இருந்தாலும் சரி அதனை வெற்றிகரமாக எதிர்கொண்டு மக்களுக்குத் தேவையான நடவடிக்கை எடுத்த ஒரே தலைவி ஜெயலலிதாவின் அரசு தான். எடப்பாடியார் காலத்தில்கூட ஒக்கி புயல், கஜா புயல் ஆகியவற்றைத் திறமையாக எதிர்கொண்டு மக்களுக்குத் தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்த விடியா அரசு இயற்கை இடர்பாடு என்றாலே மக்களுக்கு எந்த விதமான நன்மையும் செய்வதில்லை. திமுக அரசு ஆட்சிக்கு வந்ததிற்கு முன்னர் பின்னோக்கி பார்த்தால் எந்த புயலுக்கு எந்த நிவாரணமும் அளித்தது கிடையாது. தற்போது மாண்டஸ் புயல் வந்து கிட்டவிட்ட 15 நாட்களுக்கு மேலாகிறது. இதே இடத்தில் முதலமைச்சர் வந்து பார்த்துவிட்டு உடனடியாக நிவாரணம் வழங்குவேன் என்று சொன்னார். 15 நாட்கள் ஆகிறது, இதுவரை எந்த நிவாரணமும் வழங்கவில்லை.
மாண்டஸ் புயல் நிவாரணம் கூட்டுறவுச் சங்க உறுப்பினருக்கும் தரவில்லை. கூட்டுறவுச் சங்க மகளிருக்கும் தரவில்லை. படகு உரிமையாளர், சின்ன கட்டுமரம், பெரிய கட்டுமரம் வைத்திருப்பவர்களுக்கு எந்த விதமான நிவாரணமும் இல்லை. படகுகள் மூழ்கி இருந்ததை அவரே (முதல்வரே) நேரில் பார்த்தார். இப்போது மீன்வளத்துறை அலுவலகத்தில் நீங்கள் டீசல் பில் கொண்டுவாருங்கள், படகு ஓடியதா இல்லையா என்று 10 கேள்விகள் கேட்டு மீனவர்களை அலைகழிய வைத்துள்ளார்கள், இதுவரை நிவாரணம் தரவில்லை.
எங்கள் ஆட்சிக் காலத்திலே நீங்கள்தான் முதலாளியா என்று பத்திரம் மட்டும் வாங்கிக்கொண்டோம். படகு முழ்கிவிட்டதா என்று 5 லட்சத்தைக் கையிலே அளித்தோம். ஆனால் இந்த அரசு முதலமைச்சர் நேரில் வந்து பார்த்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. பொதுவாக முதலமைச்சர் புயல் பாதித்த இடத்தைதான் பார்ப்பார்கள். புயல் கரையைக் கடந்தது மகாபலிபுரத்தில், நாங்கள் அங்குச் சென்று பார்க்கிறோம். முதலமைச்சர் அங்குச் சென்று பார்க்கவில்லை.
முதலமைச்சர் பார்க்கவில்லை என்றாலும் 7 கடற்கரை மாவட்டங்கள் பாதிக்கப்பட்ட நிலையிலே மீனவர்களுக்கு, எஞ்ஜின் பொருத்திய கட்டுமரம், விசைப்படகு, சிறிய விசைப்படகு, நாட்டுப் படகு இப்படி பகுதி சேதம் அடைந்து முழு சேதம் அடைந்து அவர்கள் தொழில் செய்யாமல் இருக்கிறார்கள்.