சென்னை:எம்.ஜி.ஆரின் 'உலகம் சுற்றும் வாலிபன்' திரைப்படம் வெளிவந்து ஐம்பது ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் அதிமுக சார்பில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கலந்து கொண்டு அதிமுக கொடியினை ஏற்றி வைத்து, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் திருவுருவப்படத்திற்கு மலர்த் தூவி மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த ஜெயக்குமார், "ஆளுங்கட்சியாக திமுக இருந்தபோது உலகம் சுற்றும் வாலிபன் படம் வெளியாகாமல் இருப்பதற்குப் பல தடங்கல்களை தந்தனர். அத்தனையையும் மீறி படம் வெளியாகி வெற்றிப்படமாக அமைந்தது. போஸ்டர் ஒட்டினால் கிழிப்பேன் என திமுகவினர் தெரிவித்தனர். போஸ்டர் ஒட்டாமல் வெற்றிப் படமாக அமைந்த ஒரே படம் உலகம் சுற்றும் வாலிபன்தான். தமிழகம் மட்டுமல்ல உலகம் முழுவதும் எம்ஜிஆர் மட்டும்தான் சூப்பர் ஸ்டார்" என்று கூறினார்.
அமைச்சர்களின் இலாகா மாற்றம் குறித்து பேசிய அவர், "திமுக ஆட்சி பொறுப்பேற்ற போது பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் போல பொருளாதார வல்லுநர் இல்லை எனத் தெரிவித்தனர். அறிவும், ஆற்றலிலும் சிறந்தவர் பி.டி.ஆர் எனத் தெரிவித்தனர். ஆடியோவில் 30 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் எனப் பேசியது உண்மையாகத்தான் இருக்கும். அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் இலாகா மாற்றம் அதனை உறுதிப்படுத்தும் வகையில் உள்ளது.
இது குறித்து முதலமைச்சரும், பிடிஆரும் விளக்கம் கொடுத்தாலும், பிடிஆர் டம்மியாக தான் இப்போது வைக்கப்பட்டிருக்கிறார். ஜமீன்தார் முறையில் திமுகவில் பொறுப்பு வழங்கப்பட்டு வருகிறது. தனக்குப் பின்னால் உதயநிதி ஸ்டாலின் வர வேண்டும் என்பதற்காகவே, அதற்கேற்றார் போல் முதலமைச்சர் ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார். பிடிஆர், நாசர் ஆகியோர் அதிமுகவிற்கு வந்தால் அங்கீகரிப்போம்" என்று கூறினார்.
இதையும் படிங்க: "என் வாழ்விலேயே மிகவும் நிறைவான ஆண்டுகள்" - நிதியமைச்சர் பொறுப்பு குறித்து பிடிஆர் உருக்கம்!