தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"செந்தில் பாலாஜியை எய்ம்ஸ் மருத்துவரை வைத்து சோதனை செய்ய வேண்டும்"- ஜெயக்குமார் வலியுறுத்தல்! - ஜெயக்குமார்

தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கம் செய்ய வேண்டும் என்றும், செந்தில் பாலாஜி உடல்நிலையை எய்ம்ஸ் மருத்துவரை கொண்டு பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் வலியுறுத்தியுள்ளார்.

Jayakumar
ஸ்டாலின்

By

Published : Jun 14, 2023, 12:36 PM IST

Updated : Jun 14, 2023, 3:56 PM IST

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்கள் சந்திப்பு

சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வந்த நிலையில், இன்று(ஜூன் 14) அதிகாலையில் அவர் அதிரடியாக கைது செய்யப்பட்டார். அப்போது திடீரென செந்தில் பாலாஜிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜி கைது குறித்து, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். பட்டினப்பாக்கத்தில் உள்ள தனது இல்லத்திலிருந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், "பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் என்ற பழமொழிக்கேற்றவாறு செந்தில் பாலாஜி அமலாக்க துறையால் கைது செய்யப்பட்டிருக்கிறார். அவர் கடந்த இரண்டு ஆண்டு திமுக ஆட்சியில் கோடிக்கணக்கான ரூபாய்களை சம்பாதித்துள்ளார். தமிழக முழுவதும் சட்டவிரோத மதுபான கூடங்களை 24 மணி நேரமும் நடத்தி பணம் சம்பாதித்துள்ளார். ஒவ்வொரு மது பாட்டிலுக்கும் கூடுதலாக 10 ரூபாய் வைத்து கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்துள்ளார். அவருக்கு பேரே 10 ரூபாய் பாலாஜி என மாறிவிட்டது.

அண்ணாநகர் மோகன் வீட்டில் சோதனை நடைபெற்றபோது முதல்வர் ஏன் அமைதியாக இருந்தார்? அப்போது ஏன் எதுவும் சொல்லவில்லை? - ஆனால் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது என்றவுடன் மட்டும் ஏன் நள்ளிரவில் ஆலோசனை செய்கிறார்?- முதல்வரின் குடும்பம் பற்றிய அனைத்து தகவல்களும் செந்தில் பாலாஜிக்கு தெரியும். அதனால் தான் அவரை பாதுகாக்க துடிக்கிறார்.

நேற்று காலை நலமாக நடைபயிற்சி மேற்கொண்டவர் நள்ளிரவில் நெஞ்சுவலி என்று கூறுகிறார். நெஞ்சு வலியின் போது காவல்துறையினரை காலால் எட்டி உதைக்கிறார். நெஞ்சுவலியால் துடிப்பவர் எப்படி காவல்துறையினரை காலால் எட்டி உதைக்க முடியும்? - காவல்துறையினர் அவர் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும். நேற்று காலை சோதனை நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதே சோதனைக்கு ஒத்துழைப்பு தர தயாராக இருப்பதாக கூறினார். ஆனால், கைது செய்யும் நேரத்தில் நெஞ்சு வலி என கூறியது ஏன்? - அமலாக்கத்துறை விசாரணையில் இருக்கும் நபரை முதலமைச்சர் எப்படி சந்திக்க முடியும்?

அரசியல் பழிவாங்கும் நிகழ்வாக செந்தில் பாலாஜி கைதை பார்க்க கூடாது. செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டதற்கு அரசியல் சாயம் பூசக்கூடாது. சட்டம் தன் கடமையை செய்து கொண்டிருக்கிறது. சட்டப்படிதான் எதிர் கொள்ள வேண்டும். சட்டப்படி எதிர்கொள்ள திறன் இல்லாமல் நாடகம் போடக்கூடாது. எய்ம்ஸ் மருத்துவர்களைக் கொண்டு செந்தில் பாலாஜியின் உடலை பரிசோதனை செய்ய வேண்டும். சட்டப்படி கடமையை மேற்கொள்ள வேண்டும். தமிழகத்தில் உள்ள மருத்துவர்கள் அரசிற்கு சாதகமாக செயல்பட்டால், அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மருத்துவர்கள் விருப்பு வெறுப்பின்றி நேர்மையாக பணியாற்ற வேண்டும்.

2015 ஆம் ஆண்டு தனிப்பட்ட முறையில் ஊழல் புகாரில் சிக்கியதால்தான் அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கம் செய்தார். உடனடியாக தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கம் செய்ய வேண்டும். இல்லையேல் ஆளுநர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறினார்.

இதையும் படிங்க: Minister Senthil Balaji Arrest: அமைச்சர் செந்தில் பாலாஜி கைது! நள்ளிரவு முதல் நடந்தது என்ன?

Last Updated : Jun 14, 2023, 3:56 PM IST

ABOUT THE AUTHOR

...view details