சென்னை: அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்த விவகாரத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரிடம் உதவியாளராக இருந்தவர் உள்பட 2 பேரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். ராணிப்பேட்டையைச் சேர்ந்த முத்துலட்சுமி என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார்.
அதில் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி அனிபா என்ற தரகர் ஆசை வார்த்தை காட்டியதாக தெரிவித்துள்ளார். மேலும் தரகர் ஹனிபா மற்றும் ஆக்டிங் ஓட்டுநர் விஜய் ஆகிய இருவர் மூலம் தலைமைச் செயலகத்தில் அமைச்சர் விஜயபாஸ்கரின் உதவியாளராக இருந்த ரவி என்கிற டைப்பிஸ்ட் அறிமுகம் கிடைத்ததாக தெரிவித்துள்ளார்.
அரசு வேலை வாங்கித் தர 11 லட்ச ரூபாய் செலவாகும் என ரவி கூறியதன் அடிப்படையில் பணத்தை கொடுத்ததாகவும், தனக்கு பல துறை அமைச்சர்கள் தெரியும் என்பதால் எந்த துறையிலும் வேலை வாங்கித் தருவதாக கூறி நம்ப வைத்ததாகவும் முத்துலட்சுமி தன் புகாரில் தெரிவித்து உள்ளார்.
பணத்தைக் கொடுத்த பிறகு அரசு வேலை வாங்கி தராமல் அலை கழித்ததாகவும், பணத்தை திருப்பித் தருமாறு ஹனிபா மற்றும் ரவிக்குமாரிடம் கேட்டபோது இருவரும் மிரட்டியதாகவும் அவர் புகாரில் கூறி உள்ளார். இது தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவில் உள்ள வேலை மோசடி தடுப்பு பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
முத்துலட்சுமி பணம் கொடுத்ததற்கான ஆதாரங்கள் மற்றும் ஆவணங்களை போலீசார் விசாரணை மேற்கொண்டதன் அடிப்படையில்,
தற்போது தலைமைச் செயலகத்தில் ஆதி திராவிட நலத்துறையில் ஏ.எஸ்.ஓ வாக பணிபுரிந்து வந்த ரவி, பணத்தைப் பெற்றுக் கொண்டு வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்தது உறுதியானதாக போலீசார் கூறினர்.
இதனை அடுத்து ரவி மற்றும் தரகர் விஜய் ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். சுகாதாரத் துறை அமைச்சராக விஜயபாஸ்கர் இருந்த போது அவருக்கு உதவியாளராக இருந்த ரவி என்கிற டைப்பிஸ்ட் ரவி பணியிட மாற்றம் செய்து தருவதாகவும், அரசு வேலை வாங்கித் தருவதாகவும், மெடிக்கல் சீட்டு வாங்கித் தருவதாகவும் கூறி மோசடியில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுகள் உள்ளதாக தெரிய வந்துள்ளது.
சிறையில் அடைக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் உதவியாளராக இருந்த ரவியை காவலில் எடுத்து விசாரிக்க மத்திய குற்றப்பிரிவு போலீசார் திட்டமிட்டுள்ளனர். குறிப்பாக ரவி மீது கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்தும் வேறு யாருக்கும் இதேபோன்று வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்துள்ளார் என்பது குறித்தும் விரிவான விசாரணை நடத்தப்படும் எனவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறாக பணம் வாங்கிக் கொண்டு பலரையும் மோசடி செய்திருந்தால், அந்தப் பணத்தை சொத்துக்களாகவோ முதலீடுகளாகவோ ரவி எங்கெங்கு வைத்துள்ளார் என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்தனர்.
இதையும் படிங்க:"வட மாநிலத் தொழிலாளர்கள் தாக்கப்படவில்லை" - தமிழ்நாடு காவல்துறை இந்தியில் ட்வீட்!