தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மாநிலக் கல்விக் கொள்கையை இறுதி செய்யும் பணிகள் தீவிரம்.. செப்டம்பர் மாதம் அரசிடம் சமர்ப்பிக்க முடிவு!

தமிழ்நாட்டிற்காக தனித்துவமாக உருவாக்கப்படும் மாநிலக் கல்விக் கொள்கை வரும் செப்டம்பர் மாதத்தில் அரசிடம் சமர்ப்பிக்கப்படும் என கொள்கை வடிவமைப்பு குழு தலைவர் முன்னாள் நீதிபதி முருகேசன் தெரிவித்துள்ளார்.

Etv Bharat கொள்கை வடிவமைப்பு குழு தலைவர் முன்னாள் நீதிபதி முருகேசன்
Etv Bharat கொள்கை வடிவமைப்பு குழு தலைவர் முன்னாள் நீதிபதி முருகேசன்

By

Published : Aug 3, 2023, 8:19 PM IST

சென்னை:தமிழ்நாடு அரசு தேசியக் கல்விக் கொள்கைக்கு கடும் எதிர்ப்பினை தெரிவித்து வருகிறது. எனவே தமிழ்நாட்டிற்கு தனித்துவமான கல்விக் கொள்கை உருவாக்கப்படும் என அறிவித்தது. அதன்படி, கடந்த ஆண்டு தமிழ்நாட்டிற்கான கல்விக் கொள்கையை உருவாக்க டெல்லி உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி முருகேசன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது.

இந்தக் குழு தமிழ்நாட்டிற்கான தனி கல்விக் கொள்கை தொடர்பாக பல தரப்பினரிடம் கருத்துகளைக் கேட்டு அறிந்தது. கல்வியாளர்கள், அரசுப் பள்ளியின் ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் எனப் பல்வேறு தரப்பினரிடமும் கருத்துகளைக் கேட்டறிந்துள்ளனர்.

மேலும் அறிக்கைகளை எழுத்து வடிவமாக்கும் பணியில் இக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். மாணவர்களுக்கான பாடப் புத்தகங்களுக்கான கருப்பொருள்களையும் வடிவமைத்து வந்தனர். ஆனால், இந்தக்குழுவின் காலம் 2023 மே மாதம் முடிவடைந்த நிலையில், பணிகளை முடிப்பதற்கு செப்டம்பர் மாதம் வரையில் கால அவகாசம் கேட்டது. அதனை ஏற்று தமிழ்நாடு அரசு செப்டம்பர் மாதத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்க கால அவகாசம் வழங்கி உள்ளது.

இந்த நிலையில் தமிழ்நாடு மாநிலக் கல்விக் கொள்கை வடிவமைப்புக்குழுவின் தலைவரும், டெல்லி உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதியுமான முருகேசன் கூறும்போது, "தமிழ்நாடு மாநிலக் கல்விக் குழுவின் உறுப்பினர்கள் பல்வேறு தரப்பினரிடம் பெற்றக் கருத்துகளைத் தொகுத்து வருகிறோம். தற்பொழுது 75 விழுக்காடு பணிகள் முடிவடைந்துள்ளன. மேலும் சில கருத்துகளை இணைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.

மாணவர்களின் நலனைப் பாதுகாக்கும் வகையிலும், தேவையான கட்டமைப்பு வசதிகளை உருவாக்குதல் உள்ளிட்ட பல்வேறு தரப்பில் இருந்தும் பெறப்பட்ட கருத்துகளைத் தொகுத்து பரிந்துரையாக செப்டம்பர் மாதம் அரசிடம் சமர்ப்பிக்கத் திட்டமிட்டுள்ளோம். குழுவின் அறிக்கையை அரசிற்கு சமர்ப்பித்த பின்னர், அவர்கள் வரைவு அறிக்கையின் மீது பொதுமக்களின் கருத்துகளைக் கேட்பார்கள்.

தேசியக் கல்விக் கொள்கையில் உள்ளவை குறித்து ஆய்வு செய்யாமல் மாநிலத்திற்கான கல்விக் கொள்கையை உருவாக்கி வருகிறோம். பள்ளி மாணவர்களுக்கான பாடத்திட்டத்தில் விழிப்புணர்வு கல்வி, வாழ்வியல் கல்வி போன்றவையும் இணைக்கப்படும்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:அமைச்சரிடம் எதிர்ப்பை பதிவு செய்த தன்னாட்சி கல்லூரிகள்: பொதுபாடத் திட்டத்தை அமல்படுத்த தீவிரம் காட்டும் அமைச்சர்!

ABOUT THE AUTHOR

...view details