சென்னை: நிலவின் தென் துருவத்தில் 14 நாட்கள் உறக்க நிலையில் இருந்த விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவரை மீண்டும் ஆய்வு பணிக்கு தயார்படுத்தும் முயற்சியில் இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
கடந்த ஜூலை 14 ஆம் தேதி நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய சந்திரயான் 3 விண்கலத்தை இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ அனுப்பியது. இஸ்ரோ அனுப்பிய விண்கலமானது ஆகஸ்ட் 23 ஆம் தேதி பூமி மற்றும் நிலவின் சுற்றுவட்ட பாதையில் நிலைநிறுத்தப்பட்டு தனது இலக்கை அடைந்தது.
அதனைத்தொடர்ந்து, சந்திரயான் 3 விண்கலத்திலிருந்து விக்ரம் லேண்டர் பிரிந்து வெற்றிகரமாக நிலவில் தரையிறக்கப்பட்டது. இதையடுத்து விக்ரம் லேண்டரிலிருந்து பிரக்யான் ரோவர் நிலவில் தரையிறக்கப்பட்டு ஆய்வு மேற்கொண்டு பல்வேறு தகவல்களை இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோவுக்கு அனுப்பியது.
இந்நிலையில், நிலவில் 14 நாட்கள் சூரிய ஒளியுடனும், அடுத்த 14 நாட்கள் இருளாகவும் காணப்படுவதால், இருள் காலங்களில் மைனஸ் 200 டிகிரிக்கு மேல் குளிர் நிலவும் எனக் கூறப்படுகிறது. இதனால் நிலவில் சூரிய நாட்களில் தொடர்ச்சியாக ஆராய்ச்சி செய்த விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் குளிர் சூழ்நிலையால் உறக்க நிலைக்கு சென்றுள்ளது.
இந்நிலையில், நிலவில் நிலவிய இருள் நீங்கிய நிலையில், விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் மீண்டும் அதன் பணிகளை தொடங்கும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது. இதனால் பிரக்யான் ரோவர், விக்ரம் லேண்டரை மீண்டும் கண்விழிக்க செய்யும் பணியில் இஸ்ரோ விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். அதனைத்தொடர்ந்து, கண்விழிக்கும் பட்சத்தில் வழக்கம் போல் நிலவின் தென்துருவத்தில் ஆய்வு மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, முன்னாள் இஸ்ரோ இயக்குநர் சிவன் கூறியதாவது, "நாம் கொஞ்சம் காத்திருந்து தான் இதை பார்க்க வேண்டும். தற்போது, நிலவில் சந்திரயான்-3 விண்கலம், ஒரு லுனார் இரவை கடந்துள்ளது. இந்நிலையில், தற்போது பகல் தொடங்குகிறது. எனவே அவற்றை விழித்தெழ செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்ற தகவல்கள் கிடைத்துள்ளன. அனைத்து அமைப்புகளும் சரியாக இயங்கினால் பிரக்யான் ரோவர் மற்றும் விக்ரம் லேண்டர் மீண்டும் அதன் பணிகளை தொடங்கும்.
மேலும், அறிவியல் சார்ந்து புதிய தகவல்களை நாம் பெறவும் சாத்திய கூறுகள் இருந்து வருகிறது. சந்திரயான்-1 நிறைய தகவல்களை சேகரித்து கொடுத்ததை போன்று சந்திரயான்-3 மூலமாக பல புதிய தகவல்களை நாம் பெறுவோம் என நான் நம்புகிறேன். நம் இஸ்ரோ விஞ்ஞானிகள் இதற்கான முழு வேலையில் ஈடுப்பட்டுள்ளனர். அவை இயங்குமா என்பதற்கு, நாம் பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும். மேலும், இது முடிவு இல்லை, ஆரம்பம் தான்" என்று தெரிவித்து உள்ளார்.
இதையும் படிங்க:Emden ship : 10 நிமிடங்கள்.. 130 குண்டுகள்.. சென்னையை கதிகலங்கச் செய்த எம்டன்.. 109 ஆண்டுகால வரலாற்றில் நடந்தது என்ன?