சென்னை:வேலூரை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வந்தது, ஐஎப்எஸ் (IFS) என்ற நிதி நிறுவனம். இந்த நிதி நிறுவனம் பொதுமக்களிடம் அதிக வட்டி தருவதாக ஆசை வார்த்தைக் கூறி, கிட்டத்தட்ட சுமார் 6 ஆயிரம் கோடி ரூபாய் வரை வசூல் செய்து மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து பாதிக்கப்பட்ட நபர்களின் புகார்களை அடிப்படையாகக் கொண்டு காவல் துறை நடவடிக்கை எடுத்தது.
அதனைத் தொடர்ந்து இந்த மோசடி தொடர்பாக பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். அது மட்டுமல்லாமல், இந்த நிநிறுவனத்தின் முகவர்கள் உள்பட 7 நபர்களை பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
மேலும் வெளிநாடுகளில் தலைமறைவாக இருந்து வரும் நிறுவனத்தின் 4 இயக்குநர்களுக்கு ரெட் கார்னர் நோட்டீஸ் பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினரால் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த நிறுவனத்திற்கு சொந்தமான 1.14 கோடி ரூபாய் பணம், 34 லட்சம் தங்கம், வெள்ளி பொருட்கள் மற்றும் 18 கார்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், 791 வங்கி கணக்கில் இருந்த ரொக்கம் மற்றும் முதலீடு தொகை என மொத்தம் சுமார் 121 கோடி முடக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: V Senthil Balaji: அமைச்சர் செந்தில் பாலாஜி எந்த வழக்கில் கைது.. முழு பின்னணி என்ன?
இதனைத் தொடர்ந்து, 38.49 கோடி ரூபாய் மதிப்புமிக்க அசையா சொத்துக்கள் கண்டறியப்பட்டு, அதன் மீது நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினர் தகவல் தெரிவித்தனர். இந்த நிலையில், இந்த வழக்கில் முன்னாள் தலைமை காவலரான காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஹேமேந்திர குமார் (47) என்பவரை பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
இதன் பின்னர் கைது செய்யப்பட்ட ஹேமேந்திர குமாரிடம் நடத்திய விசாரணையில், ஹேமேந்திர குமார் ஐஎஃப்எஸ் நிதி நிறுவனத்தில் முக்கிய முகவராக செயல்பட்டதும், இவர் 2 ஆயிரம் முதலீட்டாளர்களிடம் இருந்து 550 கோடி ரூபாய் வரை வசூலித்து கொடுத்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
காவல் துறையில் தலைமை காவலராக பணியாற்றி வந்த ஹேமேந்திர குமார், ஐஎஃப்எஸ் நிதி நிறுவனத்தில் முகவராக செயல்பட்டு பல கோடி ரூபாய் கமிஷன் தொகையையும் பெற்றுள்ளார். தொடர்ந்து, அதிக அளவு பணம் கிடைப்பதால் ஹேமேந்திர குமார் தலைமை காவலர் பணியிலிருந்து விருப்ப ஓய்வு கொடுத்துவிட்டு, ஐஎஃப்எஸ் நிறுவனத்தில் முழுநேர முகவராக செயல்பட்டதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
மேலும், ஹேமேந்திர குமாரின் வங்கி கணக்கில் இருந்த 45 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் 1.5 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்து ஆவணங்களை பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினர் பறிமுதல் செய்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.
இதையும் படிங்க: "சாதி வன்முறையைத் தூண்டும் மருத்துவர் ராமதாஸ்" பிசிஆர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க விசிக புகார்!