சென்னை :2023 ஆம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட் திருவிழா நாளை (அக். 5) தொடங்கி நவம்பர் 19ஆம் தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெறுகிறது.
உலக கோப்பை கிரிக்கெட் ஜுரம் இந்திய ரசிகர்களிடையே ஒட்டிக் கொண்ட நிலையில், தொடர் தொடங்க 24 மணி நேரத்திற்கும் குறைவான நேரமே உள்ளது. இந்நிலையில் நடப்பு உலக கோப்பை தொடரில் இந்தியாவின் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கும், நாக் அவுட் ஆட்டங்களில் சொதப்பக் கூடிய அணிகள் எவை, சஞ்சு சாம்சன் விவகாரத்தில் இந்திய அணி நிர்வாகத்தின் நிலைப்பாடு என்ன, உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், வர்ணனையாளருமான சடகோபன் ரமேஷ் ஈ.டிவி பாரத் தமிழ்நாட்டிற்கு பிரத்யேக பேட்டி அளித்து உள்ளார்.
உலக கோப்பை யாருக்கு? இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு எப்படி? :2023 ஆம் ஆண்டு உலக கோப்பையில் இந்திய அணி அரையிறுதி வரை செல்ல வாய்ப்பு உள்ளது. ஆசிய விளையாட்டில் இந்திய வீரர்கள் நன்றாக விளையாடி உள்ளனர். பேட்ஸ்மேன்கள், பவுலர்கள், நல்ல பார்மில் உள்ளனர்.
அணிக்கு கூடுதல் பலம் சேர்க்கும் விதமாக ரவிச்சந்திரன் அஸ்வின் இணைந்து உள்ளார். உள்நாட்டில் இந்திய அணி விளையாடுவது மிகப் பெரிய பலம். இந்திய அணி அரையிறுதி போட்டி வரை செல்லும் என உறுதியாக நம்பலாம். இந்தியாவை தவிர்த்து இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உள்ளிட்ட அணிகள், ஐசிசி கிரிக்கெட் போட்டிகளில் நன்றாக விளையாடி வருகிறது.
அதேநேரம், தென் ஆப்பிரிக்க அணிக்கும் நல்ல வாய்ப்பு உள்ளது. நாக் அவுட் சுற்றுகளை தவிர்த்து, ஐசிசியின் அனைத்து வடிவிலான ஆட்டங்களில் தென் ஆப்பிரிக்கா வீரர்கள் நன்றாக விளையாடி வருகின்றனர். 50 ஓவர்கள் கிரிக்கெட் பார்மட்டை பொறுத்தவரை தென் ஆப்பிரிக்க அணியில் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் நல்ல நிலையில் உள்ளனர்.
அரையிறுதிக்கு பின்னர் தான் அணிகளின் பலம், பலவீனம் தெரியவரும். கோப்பை வெல்வது என்பது அன்றைய தினம் முடிவு செய்யக் கூடியது. அன்றைய நாளில் நன்றாக விளையாடக் கூடிய வீரர்கள், முக்கியமான மற்றும் திருப்புமுனையை ஏற்படுத்தக் கூடிய வீரர்கள் காயம் காரணமாக அணியில் இடம் பெறாமல் போகும் சூழலில் அது எதிரணிக்கு நல்ல வாய்ப்பாக அமையக் கூடும்.
எனவே அரையிறுதியில் இருந்து தான் வெற்றியை நிர்ணயிக்கக் கூடிய ஆட்டங்கள் உள்ளது என்பது நிதர்சனமான உண்மை. மேலும், ஒருநாள் கிரிக்கெட்டில் 20 முதல் 40 ஓவர்கள் வரையிலான மிடில் ஓவர்கள் தான் வெற்றி வாய்ப்பை தீர்மானிக்கின்றன. அதற்கேற்ற வகையில் விளையாடும் அணிகள் நிச்சயம் ஜொலிக்கும். அதேநேரம் மிடில் ஓவர்களில் சுழற்பந்து வீச்சாளர்களை சமாளித்து அதிரடியாக விளையாடக் கூடிய வீரர்கள் கொண்ட அணிக்கு கூடுதல் பலம்.
நாக் அவுட் சுற்றில் தென் ஆப்பிரிக்கா பாணியில் நியூசிலாந்து உள்ளதா? :கடைசி இரண்டு உலக கோப்பைகளுக்கு முன், அரையிறுதி வரை சென்ற நியூசிலாந்து அணி, அதன்பின் இறுதி போட்டிகளை எட்டி இருப்பது, நாக் அவுட் சுற்றுகளின் பதற்றத்தை கையாளும் திறனை அந்த அணி வீரர்கள் பெற்று இருப்பதை காண முடிகிறது. அது அந்த அணிக்கு முன்னேற்றமாகவும் பார்க்கப்படுகிறது.
மேலும் பயிற்சி ஆட்டங்களில் நியூசிலாந்து அணி நன்றாக விளையாடி வருவதை பார்க்கையில், நடப்பு உலக கோப்பை தொடரில் மற்ற அணிகளுக்கு கடும் சவால் அளிக்கக் கூடிய அணியாக நியூசிலாந்து இருக்கும் எனத் தெரிகிறது. கேன் வில்லியம்சன் காயத்தில் இருந்து குணமடைந்து அணிக்கு திரும்பி இருப்பது, அந்த அணிக்கு கூடுதல் பலம். மேலும் நியூசிலாந்து அணியில் நல்ல பந்துவீசக் கூடிய வீரர்கள் அதிகம் இருப்பது கவனிக்கத்தக்கது.