தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"பல்வேறு துறைகளில் உள்ள அனைத்து காலிப் பணியிடங்களையும் நிரப்புக" - ஓபிஎஸ் வலியுறுத்தல்! - DMK

தமிழகத்தில் அனைத்து துறைகளிளும் உள்ள காலி பணியிடங்களையும் நிரப்ப வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

பல்வேறு துறைகளில் உள்ள அனைத்து காலி பணியிடங்களையும் நிரப்புக! - ஓபிஎஸ் வலியுறுத்தல்
பல்வேறு துறைகளில் உள்ள அனைத்து காலி பணியிடங்களையும் நிரப்புக! - ஓபிஎஸ் வலியுறுத்தல்

By

Published : Aug 17, 2023, 1:25 PM IST

சென்னை: பல்வேறு துறைகளில் உள்ள அனைத்து காலி பணியிடங்களையும் நிரப்பக் கோரி முதலமைச்சர் ஸ்டாலினை வலியுறுத்தி முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று (ஆகஸ்ட்.17) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்த அறிக்கையில் "சுதந்திர தின விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் வரும் ஆண்டுகளில் பல்வேறு துறைகளை சேர்ந்த 55 ஆயிரம் பணியிடங்களை நிரப்ப இருப்பதாக கூறியிருப்பது யானை பசிக்கு சோள்ப்பொறி போன்று உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு அரசுத் துறைகளில் 50 விழுக்காட்டிற்கு மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன என்பது அந்தந்த துறைகளுக்குச் சென்று வந்தாலே கண்கூடாகத் தெரிகிறது.

பள்ளி மற்றும் கல்லூரிகளில் பணியாளர் பற்றாக்குறை நிலவிவரும் நிலையில் தேர்வு சமயங்களில் வெளி ஆட்கள் மூலமாகவோ அல்லது ஒப்பந்த அடிப்படையிலோ தான் ஆட்களை தேர்வு செய்து தேர்வு நடத்தும் கட்டாய சூழல் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் ஏற்பட்டுள்ளது. பல்கலைக்கழகங்களிலும் அதே நிலைமை தான் காணப்படுகிறது. போட்டித் தேர்வுகள், துறை ரீதியான தேர்வுகளை நடத்துகின்ற தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்திலேயே இந்த நிலைமைதான் நிலவுகிறது.

அரசு மருத்துவமனைகளிலும் ஊழியர்கள் பற்றாக்குறை நிலவுகிறது. அரசுத் துறைகளில் பணியாற்றுகின்ற பணியாளர்களுக்கான ஊதியத்தை போடவே பல அரசு துறைகள் சிரமப்பட்டுக் கொண்டிருக்கின்றன. தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம், அரசுப் போக்குவரத்துக் கழகங்கள், இதர பொதுத் துறை நிறுவனங்களில் ஆள்பற்றாக்குறை என்பது தலைவிரித்து ஆடுகிறது.

இந்த நிலைமை நீடித்தால், அதிகாரிகளை மட்டும் வைத்துக் கொண்டு வெளி ஆட்கள் மூலம் அவ்வப்போது பணிகளை செய்யக்கூடிய அவல நிலை அரசு துறைகள் மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் ஏற்படும்.

இதையும் படிங்க: "10 ஆண்டுகளானாலும், திமுகவால் நீட்டை ரத்து செய்ய முடியாது" - எடப்பாடி பழனிசாமி!

இத்தகைய அவல நிலையில், 55 ஆயிரம் அரசு பணியிடங்கள் வரும் ஆண்டுகளில் நிரப்பப்படும் என்று முதலமைச்சர் பெருமையாக கூறியிருப்பது அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களை மனவேதனையில் ஆழ்த்துகிறது. தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையிலேயே மூன்றரை லட்சம் அரசு பணியிடங்கள் காலியாக உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

புதிதாக இரண்டு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்று 27 மாதங்கள் கடந்துள்ள நிலையில் 15 ஆயிரம் அரசு பணியிடங்கள் கூட நிரப்பப்படவில்லை. அரசுத் துறைகளில் காலியாக உள்ள 4 லட்சம் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.

கடந்த 27 மாதங்களில் ஓய்வு பெற்றோர், விருப்ப ஓய்வில் சென்றோர் ஆகியவற்றை கணக்கிட்டால் தற்போதைய காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை குறைந்தபட்சம் 4 லட்சமாக இருக்கும். இப்படி காலிப் பணியிடங்களை நிரப்பாமல், வருவாய் பற்றாக்குறையை குறைத்து விட்டோம், நிதிப் பற்றாக்குறையை குறைத்து விட்டோம் என்று சொல்வது திறமையான நிர்வாகத்திற்கு எடுத்துக்காட்டு அல்ல.

அரசின் வருவாயினை பெருக்குவதும், காலிப் பணியிடங்களை நிரப்புவதும், அதன்மூலம் வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்துவதும் தான் ஒரு திறமையான அரசிற்கு எடுத்துக்காட்டு. வரும் ஆண்டுகளில் 55 ஆயிரம் அரசு பணியிடங்கள் நிரப்பப்படும் என்ற முதலமைச்சரின் அறிவிப்பு இளைஞர்கள் மத்தியில் மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கெனவே தி.மு.க. ஆட்சியின் பாதிக் காலம் முடிந்துவிட்டது.

மீதமிருக்கின்ற காலத்திற்குள் காலியாக இருக்கின்ற அனைத்து காலிப் பணியிடங்களையும் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இளைஞர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் நிலவுகிறது. எதிர்கால சந்ததியினரின் நலனைக் கருத்தில் கொண்டு, வரும் இரண்டரை ஆண்டுகளில் அரசுத் துறைகளில் காலியாக உள்ள 4 லட்சம் பணியிடங்களையும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று தி.மு.க. அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: பாஜகவுடன் திமுக திரைமறைவில் கூட்டணி.. இஸ்லாமிய சிறைவாசிகள் விடுதலை விவகாரத்தில் தடா ரஹீம் குற்றச்சாட்டு!

ABOUT THE AUTHOR

...view details