தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நீர்ப் பற்றாக்குறை; கருகிய பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.35,000 இழப்பீடு வழங்குக - ஓபிஎஸ் வலியுறுத்தல் - Cauvery

தண்ணீர்ப் பற்றாக்குறையால் பயிர்கள் கருகியுள்ள நிலையில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 35,000 ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

தண்ணீர்ப் பற்றாக்குறை; கருகிய பயிர்களுக்கு ரூ.35,000 இழப்பீடு வழங்குக! - ஓபிஎஸ் வலியுறுத்தல்
தண்ணீர்ப் பற்றாக்குறை; கருகிய பயிர்களுக்கு ரூ.35,000 இழப்பீடு வழங்குக! - ஓபிஎஸ் வலியுறுத்தல்

By

Published : Jul 25, 2023, 4:18 PM IST

சென்னை: கர்நாடக அரசிடம் இருந்து உரிய நீரை பெற்று எஞ்சிய பயிரைக் காப்பாற்ற நடவடிக்கை எடுக்குமாறு அரசுக்கு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின்படி ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் தமிழ்நாட்டிற்கு அளித்திட வேண்டிய நீரை திறந்து விடாமல், உள்ளூர் பாசனத்திற்கு நீரை திறந்து விடுவதையும், கர்நாடகத்தில் உள்ள நீர்த்தேக்கங்களில் நீரைத் தேக்கிக் கொள்வதையும் கர்நாடக அரசு வாடிக்கையாக கொண்டுள்ளதாக அவர் குற்றம் சாட்டினார்.

இதனால் நீதிமன்றத் தீர்ப்பின்படி மேட்டூர் அணைக்கு நியாயமாக வந்து சேர வேண்டிய தண்ணீர் பெறப்படுவதில்லை எனவும்; இதன் காரணமாக, டெல்டா மாவட்ட விவசாயிகள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருவதும் வேதனையான செயல் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

காவிரி நீரில் தமிழகத்திற்கு உரிய பங்கை பெறுவதிலும் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டுவதிலும், ஜெயலலிதா உறுதியுடன் செயல்பட்டார் என்பதை தமிழ்நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள் எனக் கூறிய அவர் அந்த உறுதித் தன்மை தற்போதைய தி.மு.க. அரசிடம் இல்லை என்பது தான் உண்மை எனத் தெரிவித்தார்.

மேலும் அவர், ''நடப்பாண்டில் குறுவை சாகுபடியினை விவசாயிகள் மேற்கொள்வதற்காக, ஜூன் மாதம் 12ஆம் தேதியே மேட்டூர் அணையிலிருந்து விநாடிக்கு 10,000 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டது. மேட்டூர் அணையில் தண்ணீர் திறந்துவிடப்பட்டதை அடுத்து ஐந்து இலட்சம் ஏக்கரில் நேரடி நெல் விதைப்பினை டெல்டா மாவட்ட விவசாயிகள் மேற்கொண்டனர்.

இருப்பினும், மேட்டூர் அணையிலிருந்து திறந்துவிடப்பட்ட நீர் வாய்க்கால்களுக்கும், கடைமடைப் பகுதிகளுக்கும் செல்லவில்லை. இதனைச் சுட்டிக்காட்டி, ஜூன் மற்றும் ஜூலை மாதங்களுக்கான தமிழகத்திற்குரிய நீரை பெற்று தமிழ்நாட்டின் விவசாயத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஏற்கனவே முதலமைச்சரை வற்புறுத்தி இருந்தார்.

இதையும் படிங்க: மீண்டும் உயர்ந்த தக்காளி விலை: எவ்வளவு தெரியுமா?

அண்மையில், எதிர்க்கட்சிகள் சார்பில் பெங்களூருவில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழ்நாடு முதலமைச்சர், கர்நாடக அரசுடன் இதுகுறித்து பேசி தமிழ்நாட்டிற்கு உரிய தண்ணீரை பெற முயற்சிப்பார் என்று தமிழ்நாட்டு விவசாயிகள் எதிர்பார்த்ததாகவும் ஆனால், அதுபோன்ற ஒரு முயற்சியை முதலமைச்சர் மேற்கொண்டதாகத் தெரியவில்லை'' எனவும் அவர் கூறினார்.

இதன் காரணமாகத் தமிழ்நாட்டிற்கு உரிய நீர் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டு லட்சக்கணக்கான பயிர்கள் கருகிப் போய், விவசாயிகள் விரக்தியின் விளிம்பிற்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இதனைத் தொடர்ந்து அவர் கூறுகையில், “கே.ஆர்.எஸ். மற்றும் கபினி அணைகளுக்கு 65,000 கன அடி நீர் வந்து கொண்டிருக்கின்ற நிலையில், வெறும் 12,000 கன அடி நீர் கர்நாடக அரசால் வெளியேற்றப்படுவது நியாயமற்ற செயல்” எனக் கூறியுள்ளார். திருவாரூர் மாவட்டத்தில் பெரும்பாலான விவசாயிகள் குறுவை சாகுபடியை கைவிட்டுவிட்டார்கள் என்று கூறப்படுகிறது.

இந்த ஆண்டு 92,000 ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி மேற்கொள்ள திருவாரூர் மாவட்டத்தில் திட்டமிடப்பட்டு இருந்த நிலையில், மாவட்டத்தில் உள்ள பெரிய ஆறுகளில் தேவையான அளவுக்கு நீர் இல்லாததன் காரணமாக வயல்களில் நீர் வராததால், இந்த இலக்கை எட்ட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவிப்பதாக அவர் கூறினார்.

''இந்த ஆண்டிற்கான கர்நாடகத்தின் பருவமழை குறித்து விரிவாக ஆராயாமல், மேட்டூர் அணையின் நீர்மட்டம் 90 அடிக்கு மேல் இருக்கிறது என்பதன் அடிப்படையில், ஜூன் 12-ஆம் தேதியே மேட்டூர் அணையிலிருந்து நீரினைத் திறந்துவிட்டதும், ஜூன் மற்றும் ஜூலை மாதங்களுக்கான தமிழ்நாட்டிற்குரிய நீரை கர்நாடகா திறந்துவிடாததும்தான் தற்போதைய நிலைக்கு காரணம்'' என அவர் குற்றம்சாட்டினார்.

ஆயிரக்கணக்கான ரூபாய் செலவு செய்து விவசாயிகள் குறுவை சாகுபடி மேற்கொண்டுள்ள நிலையில், காவிரியில் தண்ணீர் திறந்துவிடாததன் காரணமாகப் பயிர்கள் கருகியுள்ளதால் விவசாயிகளுக்கு பெருத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 35,000 ரூபாய் வழங்க வேண்டும் என்றும் இந்திய விவசாயிகள் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளதாக அவர் கூறினார்.

மேலும் பேசிய அவர், “விவசாயிகளின் கோரிக்கையினை கனிவுடன் பரிசீலித்து, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 35,000 ரூபாய் வழங்கவும், கர்நாடக அரசிடமிருந்து உரிய நீரை விரைந்து பெற்று எஞ்சிய பயிர்களை காப்பாற்றிடவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” என தன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: கோடநாடு வழக்கிற்காக கரம்கோர்த்த ஓபிஎஸ் - டிடிவி தினகரன்: எடப்பாடி பழனிசாமியை எதிர்க்க உதவுமா?

ABOUT THE AUTHOR

...view details