சென்னை: தமிழ்நாட்டின் முன்னாள் தலைமைச் செயலாளர் பி.சபாநாயகம் நேற்று (ஜூன் 22) சென்னையில் காலமானார். அவருக்கு வயது 101. இவருக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். மேலும், கடந்த ஆண்டு நடைபெற்ற அவரது நூற்றாண்டு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றிருந்தார்.
முன்னாள் தலைமைச் செயலாளரான பி.சபாநாயகம், 33 ஆண்டுகளில் சிவில் சர்வீஸ் அதிகாரியாக ராஜாஜியுடன் தனிச் செயலாளராகவும், முன்னாள் முதலமைச்சர்கள் காமராஜர், பக்தவத்சலம், அண்ணாதுரை மற்றும் கருணாநிதி ஆகியோர் உடனும் பணியாற்றியுள்ளார்.
1971 மார்ச் மாதம் தமிழ்நாட்டின் தலைமைச் செயலாளராகப் பொறுப்பேற்ற அவர், ஏப்ரல் 1976 வரை அப்பதவியில் தொடர்ந்தார். மேலும் தமிழ்நாட்டில் ஆர்.வெங்கட்ராமன் தொழில் துறை அமைச்சராக இருந்தபோது, தொழில் துறைச் செயலாளராக இருந்து தமிழ்நாட்டின் தொழில்களின் தளமாக மாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆகஸ்ட் 15, 1922இல் பிறந்த சபாநாயகம், 1945ஆம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரியாக தேர்ச்சி பெற்றார். மேலும், சபாநாயகம் ஆகஸ்ட் 31, 1980 அன்று பணியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு மார்ச் 20, 1947இல் போர் சேவை மூலம் இந்திய நிர்வாகப் பணியில் நியமிக்கப்பட்டார். அவர் பொள்ளாச்சியில் சப்-கலெக்டராக தனது பணியைத் தொடங்கினார். பிறகு மத்திய, மாநில அரசுகளில் பல்வேறு பதவிகளில் பணியாற்றி உள்ளார். இது தவிர, அரசால் அமைக்கப்பட்ட பல்வேறு கமிஷன்களின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.
ஆளுநர் ஆர்.என்.ரவி இரங்கல்: "மூத்த ஐஏஎஸ் அதிகாரியும், தமிழகத்தின் முன்னாள் அரசு தலைமைச் செயலருமான ப.சபாநாயகம் மறைவுக்கு நெஞ்சார்ந்த இரங்கல்கள். அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள். மக்கள் சேவை பங்களிப்புக்காக அவர் நீண்டகாலம் நினைவுகூரப்படுவார்” என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.