சென்னை: செவிலியர்கள் பணி நிரந்தரம் குறித்து முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை எண். 356-ல் அரசு மருத்துவமனைகளில் உள்ள காலிப் பணியிடங்கள் நிரப்பப்படுவதோடு, ஒப்பந்த நியமன முறையில் தற்போது பணியாற்றும் மருத்துவர்களும், செவிலியர்களும் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால் தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் முடிந்துள்ள நிலையில், அரசு மருத்துவமனைகளில் பணியாற்றிக் கொண்டிருந்த ஆயிரக்கணக்கான மருத்துவர்களும், செவிலியர்களும் பணியிலிருந்து நீக்கப்பட்டதுதான் மிச்சம். இப்படி பெரும்பாலான விஷயங்களில் முன்னுக்குப்பின் முரணாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் தி.மு.க. அரசு, ஆங்காங்கே இரண்டாண்டு சாதனைக் கூட்டம் நடத்தி வருவது கேலிக்கூத்தாக உள்ளது.
உலக செவிலியர்கள் தினத்தை முன்னிட்டு முதலமைச்சர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், காயமாற்றும் செவிலியர்களது வாழ்வில் ஒளியேற்றிட தனது அரசு தொடர்ந்து செயலாற்றிடும் என்று தெரிவித்துள்ளார். இந்த வாழ்த்துச் செய்தியைப் படித்துப் பார்க்கும்போது, தி.மு.க. அரசு வாரி, வாரி வழங்கியதன் காரணமாக செவிலியர்கள் வாழ்வு ஒளிமயமாக விளங்குவது போலவும், இந்தப் பணி தொடரும் என்பது போலவும் தோன்றுகிறது.
உண்மை நிலை என்னவென்றால், செவிலியர்களின் கோரிக்ககளை செவி கொடுத்து கேட்கக்கூட தி.மு.க. அரசு தயாராக இல்லை. உலக செவிலியர்கள் தினத்தன்று தங்களுடைய ஒன்பது அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி செவிலியர்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துகிறார்கள் என்றால் அந்த அளவுக்கு அவர்கள் வேதனைப்பட்டுக் கொண்டு இருக்கிறார்கள். தி.மு.க. அரசு செவிலியர்களுடைய வாழ்வில் ஒளியேற்றவில்லை.
மாறாக வலியேற்றிக் கொண்டிருக்கிறது. மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் நடத்திய தேர்வில் முறையாக தேர்ச்சி பெற்று 13,000 செவிலியர்கள் தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகளில் செவிலியர்களாக பணியாற்றி வருகிறார்கள். இவர்களுக்கு அளிக்கப்பட்ட ஆணையில், முதல் இரண்டு ஆண்டுகளுக்கு ஒப்பந்த முறையில் பணியாற்ற வேண்டும் என்றும் பின்னர் அவர்களின் பணி நிரந்தரம் செய்யப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளதாக செவிலியர்கள் தெரிவிக்கின்றனர்.