சென்னை: முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 6ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் சசிகலா ஆதரவாளர்களோடு பேரணியாக சென்று மலர்த் தூவி மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "அதிமுகவின் உண்மை தொண்டர்கள் எங்கள் பக்கம் இருக்கிறார்கள். கண்டிப்பாக 2024-ல் நாங்கள் மாபெரும் வெற்றி பெறுவோம். என்னைப் பொறுத்தவரை நான் தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என நினைக்கிறேன். அந்த ஒரே எண்ணத்தில் தான் ஜெயலலிதா செயல்பட்டார்கள். அவர் வழி தான் என்னுடைய வழி. எனக்கு என்று தனி வழி கிடையாது. எப்பொழுதும் நான் மக்களுக்காக குரல் கொடுத்து வருகிறேன்.
ஆளும் கட்சியினர் செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டி அதை சரி செய்ய வேண்டியது முதலமைச்சருடைய கடமை. உங்களுக்கு மக்கள் தான் இந்த ஆட்சியைக் கொடுத்து இருக்கிறார்கள். அவர்களுக்கு துரோகம் இழைக்கக் கூடாது. மாமன்ற உறுப்பினர்களையும் எல்லை மீறி தவறு செய்பவர்களையும் கண்டித்து வைக்க வேண்டும். இவை அனைத்தும் எனக்காக நான் கேட்கவில்லை. தமிழ்நாடு மக்களுக்காகவே கேட்கிறேன்'' என்று சசிகலா கூறினார்.