தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'மீண்டும் பொறியியல் நுழைவுத் தேர்வை நடத்துக' - முன்னாள் அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர்

பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வை மீண்டும் நடத்த வேண்டும் என முன்னாள் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் இ. பாலகுருசாமி, முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

முன்னாள் அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர்
முன்னாள் அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர்

By

Published : Jul 18, 2021, 8:16 PM IST

சென்னை:தமிழ்நாட்டில் நீட் தேர்விற்கு விலக்குக்கோரி விவாதம் நடைபெற்று வரும் நிலையில், பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வை நடத்த வேண்டுமென, முன்னாள் அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் இ.பாலகுருசாமி, முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அவர் எழுதியுள்ள கடிதத்தில், 'தமிழ்நாடு உயர் கல்வி மாணவர் சேர்க்கை விகிதத்தில் (Gross Enrolment Ratio) மகத்தான சாதனை படைத்துள்ளதற்கு, மக்கள் அனைவரும் பெருமையும், மகிழ்ச்சியும் அடைகிறோம். மாணவர் சேர்க்கையில் தேசிய சராசரி அளவைவிட நாம் இரு மடங்கு அளவை (50.4 விழுக்காடு) எட்டியிருக்கிறோம்.

உலக சராசரி சேர்க்கை விகிதத்துக்கு இணை

இது உலக சராசரி சேர்க்கை விகிதத்துக்கு இணையான, பெருமிதத்துக்குரிய சாதனையாகும். இது சாத்தியமாவதற்குக் காரணம், கடந்த 15 ஆண்டுகளாக தமிழ்நாடு அரசுகளின் ஆக்கப்பூர்வமான, புதுமையான நடவடிக்கைகள் தான் என்பதில் சந்தேகமில்லை.
மேலும் விரும்பும் மாணவர்களுக்குச் சமமான, அதே சமயம் எளிதாகக் கிடைக்கும் வீதத்தில் உயர் கல்வியை விரிவுபடுத்துவது எவ்வளவு அவசியமோ, அதைப்போல் வேலைவாய்ப்பை உறுதி செய்யும் வகையில் தரமான உயர் கல்வியை வழங்குவதும் அவசியம் ஆகும்.

உயர் கல்வி முடித்தவுடன் எத்தனை பேர் வேலைக்குச் செல்கின்றனர்?

உயர் கல்வியை விரிவுபடுத்தும் முயற்சிகள் எந்த வகையிலும் தரத்தை பாதிக்கக் கூடாது. தமிழ்நாட்டில் 2005ஆம் ஆண்டு 220 பொறியியல் கல்லூரிகள் இருந்தன. தற்போது 520க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் ஆண்டுதோறும் சுமார் இரண்டு லட்சம் பேர், பொறியியல் பட்டப் படிப்பை முடிக்கின்றனர். நாட்டிலேயே இது அதிக எண்ணிக்கை தான். ஆனால், அவர்களில் எத்தனை பேர் சரியான வேலைக்குச் செல்கின்றனர்?

நுழைவுத்தேர்வு ரத்து சட்டத்தை நிராகரித்த நீதிமன்றம்

தமிழ்நாட்டில் தொழில் முறைப் படிப்புகளில் சேர்வதற்கான பொது நுழைவுத் தேர்வு முறை (CET) 1984-85ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டு, இருபது ஆண்டுகள் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. 2006ஆம் ஆண்டு நுழைவுத் தேர்வு முறை ரத்து செய்யப்பட்டது.

2005ஆம் ஆண்டு அப்போதைய அண்ணா திமுக அரசு கொண்டுவந்த இந்த சட்டத்தை எதிர்த்துப் போடப்பட்ட வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், 'இது செல்லத்தக்கதல்ல, செயல்படாதது, செயல்படுத்த முடியாதது.

இவ்வாறு நுழைவுத் தேர்வுமுறையை ரத்து செய்வது அகில இந்திய தொழில் நுட்பக் கல்விக் குழு (AICTE), இந்திய மருத்துவக் குழுமம் (MCI) ஆகியவற்றின் ஒழுங்குமுறைகளுக்கு எதிரானது' என அந்தச் சட்டத்தை ரத்து செய்தது.

இதற்கு எதிரான மேல் முறையீட்டு வழக்கில், உச்ச நீதிமன்றமும், தொழில் முறைப் படிப்புகளில் மாணவர் சேர்க்கை நடைமுறையில் பொது நுழைவுத் தேர்வைக் கட்டாயம் நடத்த வேண்டும் என உத்தரவிட்டது.

துரதிர்ஷ்டவசமாக மீண்டும் இயற்றப்பட்ட சட்டம்

அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக நான் இருந்தபோது, முந்தைய துணைவேந்தர்களான டாக்டர் வா.செ.குழந்தைசாமி, டாக்டர் மு.ஆனந்தகிருஷ்ணன் ஆகியோருடன் பொது நுழைவுத் தேர்வை ரத்து செய்வது குறித்து விவாதித்திருக்கிறேன். அப்போது இருவரும் மாணவர்களைச் சேர்ப்பதற்கு குறைந்தபட்ச தகுதியைக் கடைபிடிக்க பொது நுழைவுத் தேர்வு முறை அவசியம் என்று உறுதிபடக் கூறினர்.

ஆனால், எதிர்பாராத விதமாக 2006ஆம் ஆண்டு அப்போதைய திமுக ஆட்சியில் அமைக்கப்பட்ட டாக்டர் ஆனந்தகிருஷ்ணன் கமிட்டி அளித்த பரிந்துரைப்படி பொது நுழைவுத் தேர்வு முறையை நீக்கும் சட்டத்தை அரசு நிறைவேற்றியது.

விநோதமாக, முந்தைய அரசு கொண்டுவந்த சட்டத்தை ரத்து செய்த அதே உயர் நீதிமன்றம், இந்த அரசின் சட்டத்தை ரத்து செய்யவில்லை. மாறாக, நுழைவுத் தேர்வு முறையை நீக்குவது கிராமப்புற, ஏழை மாணவர்கள் தொழில் முறைக் கல்வியில் சேர பெரிதும் துணை புரியும் என்று அறிவித்தது.

கோழிப்பண்ணைகள் போல் செயல்படும் பள்ளிகள்

ஏழை, கிராமப்புற மாணவர்கள் பயிற்சி மையங்களில் சேர்ந்து நுழைவுத் தேர்வுக்குத் தயாராக இயலாது, நுழைவுத் தேர்வு சமூக நீதி, சமத்துவம் ஆகியவற்றுக்கு எதிரானது ஆகியவை காரணங்களாகக் கூறப்பட்டன. இது முற்றிலும் சரியானது அல்ல. உண்மையில், பயிற்சி மையங்களை அடைவதும், தரமான பள்ளிக் கல்வியை அடைவதும் ஒரே மாதிரியானவை தான்.

உதாரணத்திற்கு, நகரங்களில் உள்ள தனியார் பள்ளிகளில் படிக்கும் வசதியான, நகர்ப்புற மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களை விட அதிக மதிப்பெண் பெறுகிறார்கள். உண்மையில், மாநிலத்தில் உள்ள பல தனியார் பள்ளிகள் 'கோழிப் பண்ணைகள்' போல் மாணவர்களை அடைத்து வைத்து, 12ஆவது வகுப்பு வகுப்புத் தேர்வுக்கான 'பயிற்சியை' மட்டுமே நடத்துகின்றன.

இதற்காக வசூலிக்கப்படும் தனிக்கட்டணம், நுழைவுத் தேர்வுக்கான பயிற்சிக் கட்டணத்தைவிட மிகவும் அதிகமாகும்.

திறமையான மாணவர்கள் மட்டுமே சேர்வதை உறுதி செய்க

அண்மையில், மாநில உயர் கல்வித்துறை அமைச்சர் செய்தியாளர்களிடம் பேசுகையில், 'ஏழை, கிராமப்புற மாணவர்கள் சேர்வதற்கு உதவியாக நுழைவுத்தேர்வு முறையை நீக்கிவிட்டோம். அத்துடன் குறைந்தபட்ச மதிப்பெண்ணையும் குறைத்துவிட்டோம்' என்று தெரிவித்தார்.

ஏழை மாணவர்கள் உயர் கல்வியில் சேர்வதற்கான நடவடிக்கை அரசின் பாராட்டத்தக்க குறிக்கோள் என்றாலும், திறமையான மாணவர்கள் மட்டுமே தொழில்முறைப் படிப்புகளில் சேர்வதை உறுதி செய்ய வேண்டும் என்பதும் முக்கியமாகும்.

கல்வித்தர குறைவுக்கு நுழைவுத் தேர்வுமுறை ரத்தே காரணம்

நீட் (NEET), ஜேஇஇ (JEE) ஆகிய நுழைவுத் தேர்வுகளை ஆதரித்துவந்த, கான்பூர் ஐஐடி தலைவராக இருந்த டாக்டர் ஆனந்தகிருஷ்ணன், 'பொறியியல் கல்லூரிகளின் கல்வித் தரம் மிகவும் குறைந்து விட்டதற்குக் காரணம், தொழில் முறைப் படிப்புகளில் மாணவர்களைச் சேர்ப்பதற்கான பொது நுழைவுத் தேர்வு முறையை ரத்து செய்த அரசின் கொள்கைதான்' என்று கருத்து தெரிவித்துள்ளார்.

பொது நுழைவுத் தேர்வு முறையை (CET) நீக்கியதால் சமூக, பொருளாதார, கல்வி அடிப்படையிலான ஏற்றத்தாழ்வு எந்த வகையிலும் களையப்படவில்லை. மாறாக, வசதியான, நகர்ப்புற மாணவர்கள் தொடர்ந்து தனியார் 'பயிற்சி' பள்ளிகளில் படித்து, அதிக அளவில் தொழில் முறைக் கல்வியில் சேர்கிறார்கள் என்பதுதான் உண்மை.

நோக்கம் நிறைவேறவில்லை

எந்த நோக்கத்திற்காக பொது நுழைவுத் தேர்வு முறை ரத்து செய்யப்பட்டதோ, அந்த நோக்கம் நிறைவேறவில்லை என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. மாறாக, ஏற்கெனவே கூறியபடி கடந்த 15 ஆண்டுகளில் பல விரும்பத் தகாத விளைவுகள் ஏற்பட்டுவிட்டன.

மீண்டும் நுழைவுத் தேர்வு முறையை நடத்துக

தற்போது வேகமாக தரம் குறைந்து வரும் பொறியியல் கல்வி முறையை மீட்டெடுத்து, எதிர்காலத்தில் லட்சக்கணக்கான பொறியாளர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த மேற்குறிப்பிட்ட முறைகளே சரியான வழிகள் ஆகும்.

நாட்டிலேயே நுழைவுத் தேர்வு ஏதும் இல்லாமல் தொழில்முறைப் படிப்புகளில் மாணவர்களைச் சேர்க்கும் ஒரே மாநிலம் தமிழ்நாடு தான் என்பது விநோதமான உண்மை.

பகுத்தறிவுச் சிந்தனையுள்ள, முன்னேற்றப் பாதையை நோக்கி நடைபோடும் முதலமைச்சரின் எழுச்சிமிக்க தலைமையின் கீழ் உள்ள தமிழ்நாடு அரசு, பொறியியல் கல்வியின் தரத்தை மேம்படுத்தவும், பொறியாளர்களின் எதிர்கால வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும் நுழைவுத் தேர்வின் அவசியத்தையும் முக்கியத்துவத்தையும் புரிந்துகொண்டு, நுழைவுத் தேர்வின் தேவையைப் பரிசீலிக்கும் என உறுதியாக நம்புகிறேன்' எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க:மறைந்த ஸ்டேன் சுவாமிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் மரியாதை

ABOUT THE AUTHOR

...view details