தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

முன்னாள் அமைச்சர் செல்வகணபதி மீதான சுடுகாட்டு கூரை ஊழல் வழக்கு; ஒத்தி வைத்த உயர் நீதிமன்றம்! - அதிமுக அரசு ஊழல்

Madras HC: அதிமுக ஆட்சியில் நடைபெற்ற சுடுகாட்டு கூரை ஊழல் வழக்கில் விதிக்கப்பட்ட 2 ஆண்டுகள் சிறை தண்டனையை எதிர்த்து முன்னாள் அமைச்சர் செல்வகணபதி உள்ளிட்டோர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணையை உயர் நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது.

Former aiadmk minister selvaganapathy graveyard roof scam madras high court adjourn
முன்னாள் அமைச்சர் செல்வகணபதி

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 14, 2023, 8:02 AM IST

சென்னை:அதிமுக ஆட்சிக் காலத்தில் கடந்த 1995, 1996ஆம் ஆண்டுகளில் உள்ளாட்சித் துறை அமைச்சராக பதவி வகித்த செல்வகணபதி, தமிழகத்தில் சுடுகாடுகளுக்கு கூரை அமைக்கும் திட்டத்தில் 23 லட்சம் ரூபாய் அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதாக சிபிஐ வழக்குப் பதிவு செய்தது.

இந்த வழக்கை விசாரித்த சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம், செல்வகணபதி, ஐஏஎஸ் அதிகாரிகள் ஜெ.டி.ஆச்சார்யலு, எம்.சத்தியமூர்த்தி உள்பட 5 பேருக்கும் தலா 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, கடந்த 2014ஆம் ஆண்டு தீர்ப்பளித்தது. அதேநேரம், கூட்டுச் சதி குற்றச்சாட்டில் இருந்து இவர்களை விடுதலை செய்தும் தீர்ப்பளித்தது.

கூட்டுச்சதி குற்றச்சாட்டில் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து சிபிஐ தரப்பிலும், தண்டனையை எதிர்த்து செல்வகணபதி உள்ளிட்டோர் தரப்பிலும் சென்னை உயர் நீதிமன்றத்தில் 2014ஆம் ஆண்டில் மேல்முறையீடு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. கடந்த 9 ஆண்டுகளாக நிலுவையில் இருந்து இந்த வழக்குகள், நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, இரு தரப்பிலும் வாதங்கள் தொடங்கின.

தண்டிக்கப்பட்டவர்கள் தரப்பில், பணிகள் முடித்து 3 ஆண்டுகள் கழித்து ஆய்வு செய்யப்பட்டதாகவும், சுடுகாடுகளுக்கு சுற்றுச்சுவர் இல்லாததாலும், திறந்தவெளி அமைந்திருந்ததாலும், அப்பகுதியில் உள்ளவர்களாலேயே கட்டடங்கள் சேதப்படுத்தப்பட்டதாகவும் வாதிடப்பட்டது.

மேலும், புகார் அளித்த வழக்கறிஞர் ரவிச்சந்திரனிடம் முறையாக விசாரிக்கவில்லை என்றும், உரிய ஆய்வு நடத்தாமல் திடீரென அறிக்கை தாக்கல் செய்ததை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது தவறு எனவும் வாதிடப்பட்டது. சிபிஐ தரப்பில், மத்திய அரசு திட்ட நிதி தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளது.

100 சுடுகாடுகளுக்கு மேற்கூரை அமைக்க ஒப்புதல் அளித்துவிட்டு, 96 சுடுகாடுகளுக்கு மட்டுமே முடிக்கப்பட்டுள்ளது, அதிலும் தலா 23 லட்சம் ரூபாய் தொகையை பெற்றுக் கொண்டுள்ள நிலையில், 17 லட்சம் ரூபாய் அளவிற்கு மட்டுமே பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது என வாதிடப்பட்டது. பின்னர் செல்வகணபதி தரப்பில் பதில் வாதங்களை வைக்க அவகாசம் கோரியதை அடுத்து, விசாரணை அக்டோபர் 17ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.

இதையும் படிங்க: வாச்சாத்தி வழக்கு: குற்றவாளிகள் 19 பேர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு!

ABOUT THE AUTHOR

...view details