சென்னை:அதிமுக முன்னாள் அமைச்சரான பி.வி.ரமணாவின் அலுவலகம் சென்னையை அடுத்த அமைந்தகரை புல்லா அவென்யூ பகுதியில் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், இந்த அலுவலகத்தைச் சுற்றி இருக்கும் பகுதிகளில் அதிகமான துர்நாற்றம் வீசி வந்துள்ளது. இதனை உணர்ந்த அப்பகுதி மக்கள், இது குறித்து காவல் துறையினருக்குத் தகவல் அளித்துள்ளனர்.
இதனையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த அமைந்தகரை காவல் துறையினர், அலுவலகத்தின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது, அந்த அலுவலகத்தின் அறையில் அழுகிய நிலையிலான ஆண் சடலம் ஒன்று கிடந்துள்ளது. இதனையடுத்து காவல் துறையினர் விசாரணையை முடுக்கி உள்ளனர்.
இந்த விசாரணையில் முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணாவிடம் கார் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த அப்துல் முகமது (43) என்பவரின் உடல்தான் அழுகிய நிலையில் அவரது அலுவலகத்திலேயே கண்டெடுக்கப்பட்டது தெரிய வந்துள்ளது. எனவே, இது குறித்து முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணாவிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தியதில், திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த அப்துல் முகமது ஓட்டுநராக 45 நாட்களுக்கு முன்னதாகத்தான் தன்னிடம் ஓட்டுநராக வேலை பார்க்கத் தொடங்கியதாக அமைச்சர் பி.வி.ரமணா தெரிவித்துள்ளார்.
அது மட்டுமல்லாமல், ஓட்டுநர் அப்துல் முகமது கடந்த சில நாட்களாக குடிப்பழக்கம் காரணமாக சரி வர வேலைக்கு வருவதில்லை என்றும் தெரிவித்துள்ளார். குறிப்பாக, புல்லா அவென்யூவில் இருக்கும் அலுவலகத்தில்தான் ஓட்டுநர்கள் தங்குவார்கள் எனவும் விசாரணையில் அமைச்சர் தெரிவித்துள்ளார்.