சென்னை:கடந்த 19ஆம் தேதி நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலின்போது வண்ணாரப்பேட்டை 49ஆவது வார்டுக்கு உட்பட்ட வாக்குச்சாவடி ஒன்றில் திமுகவினர் கள்ள ஓட்டு போட முயல்வதாக தகவல் கிடைத்து, அங்கு சென்ற முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தலைமையிலான அதிமுகவினர் அங்கிருந்த திமுக பிரமுகர் ஒருவரைப் பிடித்து தாக்கி, அவரை அரை நிர்வாணப்படுத்தி அழைத்துச் சென்று காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
இந்த சம்பவத்தை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டதை அடுத்து அந்த வீடியோ வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
அதனைத் தொடர்ந்து கள்ள ஓட்டு போட முயன்ற நபரை பிடித்து கொடுத்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி ஜெயக்குமார் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட அதிமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து திமுக பிரமுகர் நரேஷ் அளித்த புகாரின் பேரில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உட்பட 40 பேர் மீது தண்டையார்பேட்டை காவல்துறையினர் 10 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
மற்றொரு வழக்கில் மீண்டும் கைது
அதேபோல அரசு உத்தரவை மீறி, சாலை மறியலில் ஈடுபட்டதற்காக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் உட்பட 113 அதிமுகவினர் மீது ராயபுரம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்திருந்தனர். இந்நிலையில் திமுக பிரமுகரைத் தாக்கி அரை நிர்வாணப்படுத்திய வழக்கில் நேற்று முன்தினம் இரவு (பிப்.21) மாதவரம் துணை ஆணையர் சுந்தரவதனம் தலைமையிலான காவல்துறையினர் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை அவரது வீட்டில் வைத்து கைது செய்து எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பூந்தமல்லி கிளைச் சிறையில் அடைத்தனர்.
இதனையடுத்து சாலை மறியலில் ஈடுபட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை இன்று (பிப்.23) காலை ராயபுரம் காவல்துறையினர் மீண்டும் கைது செய்து பூந்தமல்லி கிளைச் சிறையிலிருந்த ஜெயக்குமாரை அழைத்து சென்று ஜார்ஜ் டவுன் 16ஆவது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
மார்ச் 9ஆம் தேதி வரை நீதிமன்ற காவல்
சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் 15ஆவது மாஜிஸ்திரேட் நீதிபதி முரளி கிருஷ்ணா ஆனந்த் விடுமுறை என்பதால், 16ஆவது மாஜிஸ்திரேட் நீதிபதி தயாளன் தன்னால் விசாரணைக்கு எடுத்துகொள்ள முடியாது எனக் கூறினார்.
அதனைத்தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் ஜாமீன் மனுவை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தின் பொறுப்பு நீதிபதியாக இருக்கும் நீதிபதி தவுலத்தம்மாளிடம் 16ஆவது மாஜிஸ்திரேட் தயாளன் விசாரிக்க அனுமதி வழங்கக்கோரி, ஜெயக்குமார் தரப்பு வழக்கறிஞர் அனுமதி கேட்டதையடுத்து அனுமதி வழங்கப்பட்டது.
முன்னதாக சாலைமறியலில் ஈடுபட்ட வழக்கில் ஆஜர்படுத்தபட்ட ஜெயக்குமாரை மார்ச் 9ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.