தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கொடநாடு கொலை வழக்கில் பழனிசாமியை கைது செய்யாதது ஏன்? - புகழேந்தி

கொடநாடு கொலை வழக்கில் எடப்பாடி பழனிசாமியை கைது செய்யவில்லை என்றால் தனது தலைமையில் தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடைபெறும் என அதிமுக முன்னாள் செய்தித் தொடர்பாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.

Pugazhendhi press meet
Pugazhendhi press meet

By

Published : Feb 16, 2022, 7:26 AM IST

சென்னை:நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் மீது குற்றச்சாட்டு வைக்கும் விதமாக அதிமுக முன்னாள் செய்தித் தொடர்பாளர் புகழேந்தி நேற்று (பிப். 15) செய்தியாளர் மன்றத்தில் செய்தியாளரைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், "நகர்புற உள்ளாட்சி தேர்தல்காக பரப்புரையில் இருக்கும்போது, "எம்ஜிஆர் வேடமிட்ட ஒருவர், எடப்பாடி பழனிசாமி காலில் விழுந்துள்ளார். இதை அங்கிருக்கும் அமைச்சர்களும் யாரும் தடுக்கவில்லை, இந்த செயல் கண்டனத்துக்குரியது.

கொடநாடு கொலை வழக்கில்

எடப்பாடி பழனிசாமி எம்ஜிஆரை பார்த்திருக்க மாட்டார். எம்ஜிஆர் காலில் விழுந்திருக்க மாட்டார், அவர் சசிகலா காலில் விழுந்தார். மேலும் 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' கொண்டு வர வாய்ப்பு இல்லை. அமைதிப்படை திரைப்படத்தில் அம்மாவாசை கதாபாத்திரத்தைப் பார்த்து ரசித்து இருக்கிறோம். தற்போது பழனிசாமிக்குதான் அந்த கதாபாத்திரம் பொருத்தமாக இருக்கும்.

அதிமுக முன்னாள் செய்தி தொடர்பாளர் புகழேந்தி

திமுக மீது ஒரே ஒரு விமர்சனம் தான் மக்களுக்கு உண்டு. கொடநாடு கொலை வழக்கில் இன்னும் பழனிசாமி கைது செய்யாமல் இருப்பது ஏன்? இதைத் தவிர திமுகவை குறை சொல்ல முடியாது.

மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற்றார். அதே போலதான், திமுக தமிழ்நாட்டில் வெற்றிப் பெறும். அதிமுகதான் இதற்கு முழு காரணம். பாஜக கூட்டணியில் இருந்து நாங்கள் வரமாட்டோம் என பழனிசாமி கூறுகிறார். அப்படி இருக்கையில் எப்படி மக்கள் அவருக்கு வாக்களிப்பார்கள். சென்னையில் உள்ள எந்த மாவட்ட செயலாளர்களும் பழனிசாமி பேச்சை கேட்பதில்லை.

அதிமுகவும் பாஜகவும் ஒன்றுதான்

எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக வர கோடிக்கணக்கில் செலவு செய்தார். ஆனால் நகர்புற உள்ளாட்சி தேர்தலில் ஏன் அதிமுக வேட்பாளருக்கு செலவு செய்யவில்லை?. ஏழு பேர் விடுதலையில் அதிமுக எத்தனை தடவை ஆளுநரை பார்த்தார்கள்? நான்கு வருடங்களில் எடப்பாடி பழனிசாமி என்ன நன்மைகள் செய்தார்?. அவர் செய்த ஒரே நன்மை 7.5 விழுக்காடு அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் உள்ஒதுக்கீடு மட்டுமே.

அதிமுகவும் பாஜகவும் ஒன்றுதான். மக்கள் அதிமுகவுக்கு வாக்களித்தால் அது பாஜகவுக்கு போகும். திமுக கூட்டணி கொள்கை கோட்பாடுகளுடன் ஒன்றாக உள்ளனர். கர்நாடகாவில் நடந்த சம்பவம் குறித்து பழனிசாமி எந்த ஒரு கண்டன அறிக்கையும் அளிக்கவில்லை.
கொடநாடு கொலை வழக்கில் எடப்பாடி பழனிசாமி கைது செய்யவில்லை என்றால் என் தலைமையில் தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடைபெறும்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க : நீட்: வேண்டாம்னு சொல்லியும் திமுக அதைச் செஞ்சாங்க, ஆதாரம் இருக்கு - எடப்பாடி

ABOUT THE AUTHOR

...view details