சென்னை:சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்தபின் விடுதலையாகி சென்னை திரும்பியுள்ள சசிகலா தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்துவார் என்ற எதிர்பார்ப்பு பலரின் மத்தியில் இருந்துவந்த நிலையில், அவர் அரசியலிலிருந்து ஒதுங்குவதாக அறிவித்தார்.
நாளை தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், ஆயிரம் விளக்குச் சட்டப்பேரவைத் தொகுதியைச் சேர்ந்த சசிகலாவின் பெயர் வாக்காளர் பட்டியலில் இடம்பெறவில்லை என்ற தகவல் தற்போது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
சசிகலா மட்டுமின்றி அவரது உறவினரான இளவரசியின் பெயரையும் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கியுள்ளனர் சென்னை மாநகராட்சித் தேர்தல் அலுவலர்கள்.
இந்த விவகாரம் பரபரப்பாகவே, போயஸ் கார்டன் வேதா இல்லம் நினைவு இல்லமாக மாற்றப்பட்டதைத் தொடர்ந்து அங்கு வசித்த அனைவருடைய பெயர்களும் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தேர்தல் அலுவலர்கள் தெரிவித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் சசிகலா, அவரது உறவினர் இளவரசி ஆகியோர் நாளை வாக்களிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது சசிகலா ஆதரவாளர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.