சென்னை:கடந்த 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், சென்னை நங்கநல்லூர் தனியார் குடியிருப்பில் வசித்து வந்த, அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் அமைப்பின் முன்னாள் தேசிய தலைவரும், மருத்துவருமான சுப்பையா சண்முகத்துக்கும், அதே குடியிருப்பில் வசித்து வரும் வயதான பெண்மணி ஒருவருடன் இடையே கார் பார்க்கிங் தொடர்பாக பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
பெண்மணிக்கு சொந்தமான கார் பார்க்கிங் இடத்தில் தொடர்ந்து மருத்துவர் சுப்பையா சண்முகம் காரை நிறுத்தி பிரச்சினையில் ஈடுபட்டு வந்துள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த வயதான பெண்மணிக்கு பல்வேறு விதமாக தொந்தரவுகளைக் கொடுத்துள்ளார். அதில் உச்ச பட்சமாக பெண்மணியின் வீட்டில் சிறுநீர் கழித்துள்ளார். இது தொடர்பாக அந்தப் பெண்மணி எதுவும் செய்ய முடியாத நிலையில் ,பெண்மணிக்கு ஆதரவாக அதே குடியிருப்பில் வசித்து வரும் பாலாஜி விஜயராகவன் என்பவர் ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
பெண் வீட்டின் முன்பு சிறுநீர் கழிக்கும் சிசிடிவி காட்சி
புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருந்தது. டாக்டர் சுப்பையா சண்முகம் பெண்மணி வீட்டில் சிறுநீர் கழிக்கும் அந்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து, காங்கிரஸில் இருக்கும் தேசிய மாணவர் அமைப்பு சார்பில் இதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டு, சுப்பையா சண்முகத்தை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.
இந்த விவகாரம் தொடர்பாக சமூக வலைதளங்களில் பல்வேறு கண்டனங்கள் எழுந்தன. இதற்கு பதில் அளிக்கும் வகையில் அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் தேசிய செயலாளர் நிதி திரிபாதி, காங்கிரஸின் மாணவர் அமைப்பு தெரிவித்த குற்றச்சாட்டுக்கும், சமூக வலைதளங்களில் தெரிவித்தக் கருத்துக்கும் எதிர்ப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டார்.