கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருக்கும்போதும் வடசென்னையில் அப்படி ஒரு தடை இல்லாததுபோல் மக்கள் இயல்பாக வெளியில் சுற்றுவதை காண முடிகிறது. தங்களது அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியே வரும் மக்கள், நெரிசலான தெருக்கள் குறுகிய சந்து போன்றவற்றால் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க முடியாமல் திணறிவருகிறது.
இதனால் சென்னை ராயபுரம் ராபின்சன் மைதானத்தில் கூட்டுறவு துறை சார்பாக வெங்காயம், தக்காளி, உருளைக் கிழங்கு, தேங்காய் போன்ற 15 காய்கறி பொருட்கள் கொண்ட பையினை 250 ரூபாய்க்கு விற்பனை செய்ய அங்காடி இன்று தொடங்கப்பட்டது. பொதுமக்கள் சிரமம் இல்லாமல் எளிதில் வாங்க இந்த ஏற்பாடு செய்யப்பட்டது.
15 வகையான காய்கறிகளை கொண்டு விற்பனை செய்யப்பட்ட பையை வாங்க முந்தி அடித்துக்கொண்டு செல்லும் மக்கள் இங்கு, காலை 9 மணி முதல் காய்கறி பை வாங்குவதற்கான டோக்கனை பொதுமக்களுக்கு வழங்கி சமூக இடைவெளியுடன் வரிசையாக நிற்க வைத்தனர். மேலும், அமைச்சர் ஜெயக்குமார் வருகைக்காக காத்திருந்த அலுவலர்கள், அவர் வருவது காலதாமதமாக ஆனதும், பொதுமக்களுக்கு பைகளை வழங்கத் தொடங்கினர். நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்த மக்கள் சமூக இடைவெளியை மறந்து பைகளை வாங்க முந்தி அடித்துக்கொண்டு சென்று வாங்கினர். இதனைக் கட்டுப்படுத்த முடியாமல் காவல் துறையினரும் திணறி போய் நின்றனர்.
இதையறிந்த, மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமி விற்பனை செய்யும் இடத்திற்கு வந்து, பொதுமக்களை வரிசையில் நின்ற பின்னரே, காய்கறி வகைகளை வழங்குமாறு அறிவுரை கூறினார். மேலும் காய்கறி பை வாங்குவதற்காக வரிசையில் நின்ற மக்களின் மீது கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
இதையும் படிங்க:கரோனா பாதுகாப்பு: தீயணைப்பு வாகனம் மூலம் கிருமிநாசினி தெளிப்பு!