சென்னை: தமிழ்நாடு முழுவதும் பசுமை தமிழகம் இயக்கத் திட்டத்தில் 360 நாற்றங்கால்களில் வளர்க்கப்பட்ட 2 கோடியே 80 லட்சம் மரக்கன்றுகள் நடும் பணிகளின் முன்னேற்றம் குறித்து தலைமைச் செயலக வனத்துறை கூட்ட அரங்கில் நேற்று (21.10.2022) வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ் நாட்டின் வனப் பரப்பை 33 சதவீதமாக உயர்த்திட, பசுமை தமிழகம் இயக்கத்தின் மூலம் நடப்பாண்டின், முதல் கட்டமாக 360 நாற்றங்கால்கள் மூலம் வளர்க்கப்பட்டுள்ள 2..80 கோடி மரக்கன்றுகள் நடும் திட்டத்தை கடந்த 24.09.2022 அன்று தொடங்கி வைத்தார்.
அதன் தொடர்ச்சியாக வேளாண் பெருமக்கள், தொழில் நிறுவனங்கள், மக்கள் நலச் சங்கங்கள், இயற்கை ஆர்வலர்கள் மற்றும் தனி நபர்கள் மரக்கன்றுகளை எளிதாகப் பெறும் பொருட்டு, பசுமை தமிழகம் இயக்கத்தின் இணையதள முகவரியில் (www.greentnmission.com) பயன்பாட்டாளர்கள் தங்களது சுய விபரங்களை பதிவு செய்து, தங்களுக்கு தேவையான மரக்கன்றுகளை பெற்றுக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டது. இதன் பயனாக இதுவரை 7905 தன்னார்வலர்கள் பதிவு செய்துள்ளனர்.
12 ஆயிரத்து 705 மரக்கன்றுகள் இத்திட்டத்தில் மாநிலம் முழுவதும் தன்னார்வலர்கள் வேளாண் பெருமக்களுக்கு வழங்கியள்ளார்கள். இவ்வாண்டு நடவு செய்யப்பட வேண்டிய 2.50 கோடி மரக்கன்றுகளையும் நடப்பு மழைக்காலத்திலேயே நடவு செய்திட அலுவலர்கள் முனைப்புடன் பணியாற்ற வேண்டும்.