தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ரூ.1 கோடி செலவில் சென்னையில் வனத்தீ கட்டுப்பாட்டு மையம்! - usage of RFMS app

தமிழ்நாடு அரசு, சென்னையில் ஒரு கோடி ரூபாய் செலவில் வனத்தீ கட்டுப்பாட்டு மையத்தை நிறுவ உள்ளதாக தலைமைச் செயலாளர் இறையன்பு கூறியுள்ளார்.

ரூ.1 கோடி செலவில் சென்னையில் வனத்தீ கட்டுப்பாட்டு மையம்!
ரூ.1 கோடி செலவில் சென்னையில் வனத்தீ கட்டுப்பாட்டு மையம்!

By

Published : Feb 9, 2023, 1:58 PM IST

சென்னை:வனத்தீ மேலாண்மை குறித்த ஒரு நாள் கருத்துப் பட்டறை, சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை சார்பில் சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் நேற்று (பிப்.8) நடைபெற்றது. இதனை தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் இறையன்பு தொடங்கி வைத்தார்.

இதனையடுத்து பேசிய இறையன்பு, “வனங்கள் உருவான காலம் தொட்டு வனத்தீயும் இருந்து வருகிறது. வனத்தீ, வனங்களுக்கு பேராபத்தை விளைவிக்கக் கூடியவை. வனத்தீ, வன வளங்களுக்கு ஆபத்தை விளைவிப்பதல்லாமல், வனங்களின் உயிர்பன்மை, சூழழியல் மற்றும் சுற்றுச்சுழல் ஆகியவற்றிலும் பெரும் அழிவை ஏற்படுத்துகிறது.

2022ஆம் ஆண்டு ஏற்பட்ட 1,500 தீ நிகழ்வுகளில், வனத்துறையின் களப்பணியாளர்களால் மேற்கொள்ளப்பட்ட துரித நடவடிக்கைகளால் 91 சதவீத பெரிய அளவிலான தீ நிகழ்வுகள் 24 மணி நேரத்தில் கட்டுப்படுத்தப்பட்டதாக இந்திய வன அளவீடுத் துறை அறிக்கை தெரிவிக்கிறது.

இயற்கை வளங்களை பேணிப் பாதுகாக்க உறுதி பூண்டுள்ள தமிழ்நாடு அரசு, வனத்துறையை நவீனப்படுத்த 52.83 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து ஆணை வெளியிட்டுள்ளது. நடப்பு நிதியாண்டில் வனத்தீ மேலாண்மை உள்ளிட்ட பணிகளுக்காக 21.11 கோடி ரூபாயை அரசு விடுவித்துள்ளது.

தமிழ்நாடு அரசு, சென்னையில் ஒரு கோடி ரூபாய் செலவில் வனத்தீ கட்டுப்பாட்டு மையத்தை நிறுவ உள்ளது. அதேபோல் 34 கோட்டங்களில் 6.80 கோடி ரூபாய் செலவில் வனத்தீ கட்டுப்பாட்டு மையங்கள் ஏற்படுத்தப்பட உள்ளது. இந்த நிகழ்வின்போது கருத்துப் பட்டறையில் வனத்தீ மேலாண்மை தொடர்பான தொழில் நுட்பம் மற்றும் வழிகாட்டு முறைகள் குறித்த கையேட்டினை தலைமைச் செயலாளர் இறையன்பு வெளியிட்டார்.

தொடர்ந்து அவர், வனத்துறை தீ நிகழ்வுகளை உடனடியாக கண்காணிக்கத் தேவையான செயலியை அறிமுகப்படுத்தி, மாவட்ட அளவில் அனைத்துத் துறைகளும் ஒருங்கிணைந்து தீ தடுப்பு பணிகளை இணைந்து மேற்கொள்ள அறிவுறுத்தினார். மேலும், வனத்துறையை மாநில பேரிடர் நிவாரண நிதியைப் பயன்படுத்தி மாவட்ட அளவில் அலுவலர்களுக்கு பயிற்சி மற்றும் தேவையான உபகரணங்களைப் பெற அறிவுறுத்தினார்.

அது மட்டுமல்லாமல், வனத்தீயை கட்டுப்படுத்த தீயினால் அதிக பாதிப்பு ஏற்படும் மாவட்டங்களில் இளைஞர்கள் மற்றும் உள்ளூர் சமூகங்களை ஒருங்கிணைத்து பயிற்சி அளிக்க ஆவண செய்யுமாறு கேட்டுக்கொண்டார். தீத்தடுப்பு மற்றும் மேலாண்மை திட்டத்தின் கீழ் செயல்திறன் மிக்க தீ மேலாண்மை பணிகளுக்காக 5.20 கோடி ரூபாய்ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தீத்தடுப்பு பணிகளில் உயிரிழக்கும் வனத்துறை பணியாளர்கள் குடும்பங்களுக்கு 25 லட்சம் ரூபாய் அரசு உதவித்தொகை வழங்கும் வகையில் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. மேலும் இதுதொடர்பாக சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாஹூ பேசுகையில், "காலநிலை மாற்றத்தால் பல புதிய சவால்களை, வனத்துறையானது தீ தடுப்பு பணிகளை மேற்கொள்ளும்போது எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

இதற்காக வனத்துறையானது புதிய தொழில்நுட்பங்களையும், அதை சார்ந்த அறிவுத் திறனையும் பெற்று, அதன் மூலம் சிறந்த வனமேலாண்மையினை மேற்கொள்ள உள்ளது" என்றார்.

இதையும் படிங்க:சிறு தொழில் நிறுவனங்களுக்கு உதவும் வகையில் இ-காமர்ஸ் இணையதளம் துவக்கம்!

ABOUT THE AUTHOR

...view details