சென்னை:புகழ்பெற்ற பின்னணி பாடகி வாணி ஜெயராம் (78) இன்று காலை நுங்கம்பாக்கத்தில் ஹாடோஸ் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள அவரது வீட்டீல் மரணமடைந்தார். காலை வீட்டு வேலைக்கு வந்த பெண் பலமுறை காலிங் பெல் அழுத்தியும் வாணி ஜெயராம் கதவைத் திறக்காததால் சந்தேகமடைந்த அவர் வாணி ஜெயராமின் சகோதரி உமாவிற்கு தகவல் அளித்தார்.
விரைந்து வந்த உமா அவரிடம் இருந்த மற்றொரு சாவியைக் கொண்டு கதவை திறந்து பார்த்த போது வாணி ஜெயராம் கீழே விழுந்து கிடந்துள்ளார். தகவல் அறிந்து ஆயிரம் விளக்கு போலீசார் வந்து பார்த்த போது அவர் உயிரிழந்தது தெரியவந்தது. இதனால் போலீசார் சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து அவரது உடலை உடற்கூராய்விற்காக ஓமந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
வாணி ஜெயராமின் உடற்கூராய்வு சோதனை இன்றே முடிக்கப்படும் என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கபட்டுள்ளது. நாளை மதியம் 1 மணியளவில் பெசண்ட் நகரில் உள்ள மின்மயானத்தில் வாணி ஜெயராமின் இறுதி சடங்கு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வாணி ஜெயராம் இறந்த செய்தி கேட்டு திரயுலக பிரபலங்கள் பலரும் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.