தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வெளிநாடுகளில் மருத்துவம் பயின்ற 17 பேர் தொடுத்த வழக்கு தள்ளுபடி - chennai district news

சென்னை: வெளிநாடுகளில் மருத்துவம் பயின்றவர்கள் இந்தியாவில் தொழில்புரிவதற்கான தேர்வு (FMGE) வினாத்தாளை மதிப்பீடு செய்ய வல்லுநர் குழு அமைக்க கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

high court
high court

By

Published : Nov 17, 2020, 2:38 PM IST

வெளிநாடுகளில் மருத்துவம் பயின்றவர்கள் எழுதும் வெளிநாட்டு மருத்துவ பட்டதாரிகள் தேர்வு (FMGE) வினாத்தாள்களை வல்லுநர் குழு அமைத்து மதிப்பீடு செய்ய வலியுறுத்தி சீனா, ரஷ்யாவில் மருத்துவம் படித்து இத்தேர்வில் தோல்வியடைந்த பெரியண்ணன், பவித்ரா உள்பட 17 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.

அந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்னிலையில் இன்று (நவ. 17) விசாரணைக்கு வந்தது. அப்போது தேசிய மருத்துவ ஆணையம், தேசிய தேர்வுகள் வாரியம் தரப்பில், எம்பிபிஎஸ் இறுதியாண்டு பாடத்திட்டத்தில் இருந்துதான் வினாத்தாள் வடிவமைக்கப்பட்டதாகவும், முன்னதாக 20 பேர் கொண்ட குழு வினாத்தாளை ஆய்வு செய்தது என்றும் தெரிவிக்கப்பட்டது. தேர்வு முறையாக நடந்துள்ளதால் நீதிமன்றம் தலையிட முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தொழில்நுட்பம், அறிவியல் சார்ந்த விவகாரங்களில் வல்லுநர் குழு எடுக்கும் முடிவுகளில் தலையிட முடியாது. இந்த வழக்கைப் பொறுத்தவரை ஏற்கனவே 20 வல்லுநர்கள் கொண்டு குழு நான்கு நாள்களாக ஆய்வு செய்ததாகவும், எவ்வித தவறும் நடக்கவில்லை என்ற முடிவிற்கு வந்துள்ளதாலும், வல்லுநர் குழுவை அமைக்க முடியாது எனக் கூறப்பட்டது. வழக்கைத் தீர விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அம்மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

வெளிநாடுகளில் படித்து இந்தியாவில் மருத்துவ தொழில்புரிய அனுமதி வழங்குவதை பொறுத்தவரை, அவர்களின் தகுதியை தீர்மானிக்க, அதிகபட்ச தரத்தை உறுதிசெய்யும் வகையிலேயே இந்தத் தேர்வு நடத்தப்படும். மனுதாரர்கள் கோரிக்கையில் நிவாரணம் வழங்க முடியாது என்பதால், மனுதாரர்கள், தங்களை முழுமையாகத் தயார்படுத்தி அடுத்த ஆண்டு தேர்வை எதிர்கொள்ள உயர் நீதிமன்ற நீதிபதி அறிவுறுத்தி உள்ளார்.

வெளிநாடுகளில் மருத்துவம் படித்தவர்கள் இந்தியாவில் மருத்துவராகத் தொழில்புரிய வெளிநாட்டு மருத்துவ பட்டதாரிகள் தேர்வினை (FMGE) எழுத வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் ஜூன், டிசம்பர் மாதங்களில் நடத்தப்படும் இத்தேர்வில், 300-க்கு 150 மதிப்பெண் எடுத்தவர்களை மட்டுமே FMGE தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களாக தேசிய தேர்வுகள் வாரியம் அறிவிக்கும்.

அப்படி, வெளியிடப்படும் முடிவுகளில் மறு கூட்டல், மறு மதிப்பீடு ஆகியவை கிடையாது என்றும், கேள்வித்தாள் (அ) திருத்தப்பட்ட விடைத்தாள் தேர்வர்களுக்குக்கு தரப்படாது எனவும் விதிகள் உள்ளன.

கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக இந்தாண்டு தேர்வு ஆகஸ்ட் மாதம் நடத்தப்பட்டது. இதில் 17 ஆயிரத்து 198 தேர்வர்கள் கலந்துகொண்டனர். அவர்களில் ஆயிரத்து 999 மட்டுமே தேர்ச்சிபெற்றது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:ஏரி புறம்போக்கு நிலத்தில் கட்டப்பட்ட வீடுகள்: பொதுப்பணித்துறை நோட்டீஸ் மீதான நடவடிக்கைக்கு உயர் நீதிமன்றம் அனுமதி மறுப்பு!

ABOUT THE AUTHOR

...view details