சென்னை:சென்னையில் இருந்து விமானத்தில் சிங்கப்பூருக்கு கடத்த முயன்ற ரூ.3.37 கோடி மதிப்புடைய அமெரிக்க டாலர், சவுதி அரேபியா ரியால் கரன்சி ஆகிய வெளிநாட்டு பணம் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது. உள்ளாடை மற்றும் சூட்கேஸ்களுக்குள் ரகசிய அறை வைத்து கடத்திய கடத்தல் ஆசாமியை சுங்கத்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில், இது கணக்கில் இல்லாத ஹவாலா பணம் என்று தெரிய வந்துள்ளது. சென்னையில் இருந்து சிங்கப்பூர் செல்லும், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட தயாராகி கொண்டு இருந்தது. அந்த விமானத்தில் பயணிக்க வந்த பயணிகளின் உடைமைகளை, சென்னை விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் பரிசோதித்து அனுப்பி கொண்டு இருந்தனர்.
அப்போது சென்னையைச் சேர்ந்த ஒரு ஆண் பயணி மீது, பாதுகாப்பு அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து, அந்தப் பயணியை பாதுகாப்பு அதிகாரிகள் சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். சுங்க அதிகாரிகள் அந்தப் பயணியை விசாரித்த போது, அவர் சுற்றுலா பயணிகள் விசாவில் சிங்கப்பூருக்கு சுற்றுலா பயணியாக செல்வதற்காக வந்திருந்தார் என்று தெரியவந்தது. ஆனால் விசாரணையில், அவர் முன்னுக்குப் பின் முரணாக பேசினார்.
இதையடுத்து அந்தப் பயணியின் பயணத்தை சுங்க அதிகாரிகள் ரத்து செய்தனர். இதைத்தொடர்ந்து, அந்தப் பயணியை தனி அறைக்கு அழைத்து சென்று பரிசோதித்தபோது, அந்தப் பயணியின் உள்ளாடைகளுக்குள் கட்டுக்கட்டாக, அமெரிக்க டாலர் கரன்சிகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன என்பது கண்டறியப்பட்டது. அவை அனைத்தையும் சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதன் பின்பு அந்தப் பயணியின் சூட்கேஸை திறந்து பார்த்து சோதனை மேற்கொண்டுள்ளனர்.