செங்கல்பட்டு மாவட்டத்தில் இயங்கி வரும் ஃபோர்டு நிறுவனத்தை அரசே ஏற்று நடத்தக் கோரி, சென்னை ஃபோர்டு நிறுவனத்தின் உரிமைக்கான குழுவினர் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது செய்தியாளர்களை சந்தித்த எல்டியுசி (LTUC) மாநில செயலாளர் பாரதி, "செங்கல்பட்டு மாவட்டத்தில் இயங்கி வரும் ஃபோர்டு நிறுவனத்தில் 2,600 தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
அந்த நிறுவனத்தை மூடப் போவதாக கூறி, ஊழியர்களுக்கு செட்டில்மெண்ட் பேசி வருகிறார்கள். அரசிடம் முன் அனுமதி இன்றி ஃபோர்டு நிறுவனம் மூடப்படுகிறது. லாபத்தோடு இங்கிருந்து சென்றுவிடலாம் என்று அந்த நிறுவனம் எண்ணுகிறது. குஜராத்தில் இந்த ஃபோர்டு நிறுவனத்தை அரசே ஏற்று நடத்துகிறது. அதேபோல் தமிழ்நாடு அரசும் ஏன் ஃபோர்டு நிறுவனத்தை ஏற்று நடத்தக் கூடாது?
இந்த ஃபோர்டு நிறுவனத்தை நம்பி கிட்டத்தட்ட லட்சம் பேர் இருக்கின்றனர். அதனால், ஃபோர்டு நிறுவனத்தை அரசே எடுத்து நடத்த வேண்டும் அல்லது அனைத்து தொழிலாளருக்கும் வேலையை உறுதி செய்ய வேண்டும். எம்ஆர்எப் கம்பெனி ஒருமுறை இதே போன்று நிறுவனத்தை மூடுகிறோம் என்று அறிவித்தார்கள். அப்போது முதலமைச்சராக இருந்த கருணாநிதி தொழிலாளர்களின் கோரிக்கையை ஏற்க வேண்டும், இல்லையென்றால் அரசே இந்த நிறுவனத்தை எடுத்து நடத்தும் என்று தெரிவித்தார். அதற்கு பிறகு அந்த நிறுவனம் தொழிலாளர்களின் கோரிக்கையை நிறைவேற்றியது. அப்போது கருணாநிதி அரசால் செய்ய முடிந்தது தற்போது ஸ்டாலின் அரசால் செய்ய முடியாதா?. அமைச்சரிடம் மனு கொடுத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கின்றனர். அதனால், அடுத்தடுத்து போராட்டம் நடைபெறும்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: அதிமுகவில் ஏற்பட்ட பிளவால் ஈபிஎஸ் நிதானம் தவறியுள்ளார் - அமைச்சர் துரைமுருகன் விமர்சனம்!