சென்னை: ஜனாதிபதி, பிரதமர் போன்ற முக்கியப் பிரமுகர்களுக்காக மட்டுமே திறக்கப்படும் தமிழக ராஜ்பவன் விருந்தினர் மாளிகையில் தமிழக வரலாற்றில் முதன்முறையாக இன்று (மே.10) ஒரு ஏழை மாணவியின் குடும்பம் தங்குவதற்காக திறக்கப்பட்டுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த 8ஆம் தேதி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகி வழக்கம்போல, மாணவிகளே அதிக விழுக்காட்டில் தேர்ச்சி பெற்று சாதனையாளர்களாக அறியப்பட்டுள்ளனர். மாநில அளவில் முதல் இடம் (600-க்கு 600 மதிப்பெண்) பெற்ற திண்டுக்கல், அரசு உதவி பெறும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி நந்தினி (Dindigul Student Nandhini) நேற்று முன்தினம் சென்னை வந்தார். நேற்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்து அவர் வாழ்த்துப் பெற்றார். பின்னர், அவரின் உயர்கல்விக்கு ஆகும் செலவை அரசே ஏற்கும் என்று நந்தினியை உற்சாகப்படுத்தினார்.
இதனைத்தொடர்ந்து, பிளஸ் 2 தேர்வில் மாநில அளவில் ரேங்க் பெற்ற மாணவ, மாணவிகள் அனைவரையும் அழைத்து அவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியை தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி ஏற்பாடு செய்தார். ஆளுநர் மாளிகையில் நடந்த இந்த நிகழ்ச்சிக்காக தென்காசி மாவட்டம், கடையநல்லூரில் இருந்து மாணவி ஷப்ரீன் இமானா பெற்றோருடன் சென்னை வந்தார். அவர், ராஜ்பவனில் ஜனாதிபதி, பிரதமர் போன்ற மிக முக்கிய பிரமுகர்கள் தங்குவதற்காக கட்டப்பட்டுள்ள விருந்தினர் மாளிகையில் தங்க வைக்கப்பட்டார்.
விதிமுறைப்படி இங்கே தனி நபர்கள் தங்குவதற்கு அனுமதியில்லை என்று ராஜ்பவன் அதிகாரிகள், ஆளுநரின் கவனத்துக்கு கொண்டு சென்றனர். அவர்களிடம் பேசிய ஆளுநர், ''மாநில அளவில் பிளஸ் 2 தேர்வில் ரேங்க் பெற்ற மாணவி ஷப்ரீன் இமானா ஒரு ஏழை கூலித் தொழிலாளியின் குடும்பம். தமிழ் வழியில் கல்வியில் பயின்று சாதனைப் படைத்துள்ளார். அவருக்காக விதிமுறைகளை தளர்த்துவதில் தவறே இல்லை'' என்று ஆளுநர் உறுதிபடத் தெரிவித்த பிறகே, மாணவி ஷப்ரீன் இமானா குடும்பத்துக்காக ராஜ்பவனில் உள்ள விருந்தினர் மாளிகை திறக்கப்பட்டுள்ளது.