சென்னை:தியாகராயர் நகரிலிருந்து செம்மஞ்சேரி வரை செல்லும் 19 என்ற எண் கொண்ட மாநகரப்பேருந்தில் பள்ளி மாணவர்கள் படிக்கட்டில் தொங்கிக்கொண்டு பயணம் செய்த வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன.
அதில் ஓடும் பேருந்து ஜன்னல் கம்பியை பிடித்துக்கொண்டு, உயிருக்கு ஆபத்தினை விளைவிக்கும் வகையில் பள்ளி மாணவர் ஒருவர் கால்களை தேய்த்துக்கொண்டே செல்லும் காட்சிகளும் பதிவாகியுள்ளன. இதைக்காணும் பேருந்து பயணிகளும், சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் பதைபதைத்து போகின்றனர்.
மேலும் இதே போன்று பள்ளி மாணவன் ஒருவன் பேருந்து கம்பிகளை பிடித்துக்கொண்டு சக்கரம் இல்லாமல் ஸ்கேட்டிங் செய்வது போல கால்களை தேய்த்துக்கொண்டு, முன்னொக்கியும் பின்னோக்கியும், சக மாணவர்கள் கோஷம் எழுப்ப உயிருக்கு ஆபத்தான வகையில் சாலையில் சாகசம் செய்து பயணம் மேற்கொள்ளும் மற்றொரு வீடியோ காட்சியும் சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
பள்ளி, கல்லூரி மாணவர்கள் மாநகரப்பேருந்தில் மட்டுமல்லாது புறநகர் ரயில்களிலும், பறக்கும் ரயில்களிலும், இதுபோன்று ஆபத்தான நிலையில் பயணம் மேற்கொள்வது என்பது தொடர் கதையாகவே உள்ளது. சாகசம் என்ற பெயரில் தங்கள் உயிருக்கு மட்டுமல்லாமல், வாகன ஓட்டிகள், பொதுமக்கள் என அனைவரது உயிருக்கும் அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் ஆபத்தான பயணம் மேற்கொள்கின்றனர்.