சென்னை: கால்பந்து வீராங்கனை பிரியாவிற்கு வலது கால் மூட்டு சவ்வு சீரமைப்பு அறுவை சிகிச்சை, பெரியார் நகர் அரசு புறநகர் மருத்துவமனையில் அளிக்கப்பட்டது. இந்த அறுவை சிகிச்சைக்கு பின் ஏற்பட்ட சிக்கலின் காரணமாக மேல் சிகிச்சைக்காக நவம்பர் 8 ஆம் தேதி உள் நோயாளியாக ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவருடைய வலது காலில் ரத்த ஓட்ட பாதிப்பு ஏற்பட்டதன் காரணமாக மூட்டிக்கு மேல் பகுதியிலிருந்து கால் அகற்றப்பட்டது.
அதனை தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில், ரத்த நாள சிகிச்சை நிபுணர், எலும்பு மூட்டு அறுவை சிகிச்சை நிபுணர் அடங்கிய மூத்த மருத்துவ குழுவினரால் சிகிச்சை அளிக்கப்பட்டது. அவருடைய உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்டு இன்று (நவ. 15) காலை 7:15 மணியளவில் பிரியா உயிரிழந்தார்.
அதனைத் தொடர்ந்து ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் பிரியா உடலுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் மரியாதை செலுத்திவிட்டு அவரது பெற்றோருக்கு ஆறுதல் கூறினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "பெரியார் நகர் அரசு புறநகர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பிரியாவுக்கு, அந்த மருத்துவமனையில் உள்ள ஆர்த்தோ ஸ்கோபி என்கின்ற அதிநவீன தொழில்நுட்பத்தின் மூலமாக மூட்டு சவ்வு சரிசெய்யும் அறுவை சிகிச்சை செய்து முடிக்கப்பட்டது.
இருந்தாலும் மருத்துவர்களின் கவனக்குறைவு காரணமாக அந்த மாணவிக்கு அறுவை சிகிச்சைக்கு பிறகு Compression Bandage மிக இருக்கமாக கட்டப்பட்டது. இதனால் ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு ரத்த நாளங்களெல்லாம் பழுதாகி அவதிக்குள்ளாகியிருக்கிறார். நவம்பர் 7 ஆம் தேதி வரை பெரியார் நகர் புறநகர் மருத்துவமனையில் அளிக்கப்பட்ட சிகிச்சையை தொடர்ந்து, ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு நவம்பர் 8 ஆம் தேதி அன்று இடமாற்றம் செய்யப்பட்டார். இந்த மருத்துவமனையில் அனைத்து துறை மருத்துவ வல்லுநர்கள் மூலம் மிக உண்ணிப்பாக அந்த மாணவி கவனிக்கப்பட்டு வந்தார்.