சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் சென்னை காவல் துறை இணைந்து ஒருவேளை உணவிற்காக போராடும் வீடில்லா ஏழைகளுக்கும், முதியவர்களுக்கும் தேடிச்சென்று உணவு வழங்கவுள்ளது, அத்திட்டத்தின் பெயர் தான், இந்த காவல் கரங்கள். இந்த காவல் கரங்களில் 40 சமூக தொண்டு நிறுவனங்களும், 100க்கும் மேற்பட்ட தன்னார்வலர்களும் உள்ளனர்.
இவர்கள் ஹோட்டல் மற்றும் விருந்து உள்ளிட்ட இடங்களில் மீதமுள்ள உணவை சேகரித்து, இதுபோன்று உணவில்லா ஏழைகளுக்கு அளித்து வருகின்றனர். இந்த திட்டம், சென்னை காவல் துறையால் கடந்த 2021ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் மூலம் கைவிடப்பட்ட முதியவர்களை சென்னை மாநகராட்சி, சமூக நலத்துறை முதியோர் இல்லம் மற்றும் சமூக தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து சேவை புரிந்து வருகின்றனர்.
இதுபோன்ற சேவைகளுக்காக சென்னை காவல் துறை, ஸ்காட்ச் விருது மற்றும் முதலமைச்சரின் சிறந்த பயிற்சிக்கான விருது உள்ளிட்டவற்றைப் பெற்றுள்ளது. இந்தத் திட்டம் தற்போது சென்னை காவல் துறையின் கூடுதல் ஆணையர் லோகநாதன் தலைமையில் செயல்பட்டு வருகிறது.
இந்தத் திட்டத்தின் மூலம் 4,000க்கும் மேற்பட்ட மனநலம் பாதிக்கப்பட்ட நபர்களை மீட்டு அவர்களின் வீட்டில் சேர்த்தும், வெளி மாவட்டத்தில் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து குடும்பத்திடமிருந்து பிரிந்து சென்று சென்னையில் பிச்சை எடுப்பவர்கள் மற்றும் உணவில்லாமல் தவிப்பவர்கள் என 505 பேரை குடும்பத்தோடு சேர்த்து வைத்துள்ளனர்.