சென்னை:நாமக்கல் பகுதியில் உள்ள ஒரு தனியார் உணவகத்தில் அசைவ உணவு சாப்பிட்டு 40க்கும் மேற்பட்டோர் உடல் நலன் பாதிக்கப்பட்டு, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில், சிறுமி ஒருவர் ஷவர்மா சாப்பிட்டு உயிரிழந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இதனால் நாமக்கல் மாவட்டம் முழுவதும் ஷவர்மா உணவு விற்பனை செய்ய தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஹோட்டல்களிலும் உணவு பாதுகாப்புத் துறையினர் சோதனையைத் தீவிரப்படுத்தி உள்ளனர். அந்த சோதனையில் கிலோ கணக்கில் அசைவ உணவுகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.
இதனையடுத்து தமிழ்நாடு முழுவதும் உள்ள உணவகங்களில் தயாரிக்கப்படும் உணவுகளில், உரிய வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படுகிறதா? என கண்காணிக்கவும், அதனை ஆய்வு செய்யவும் உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர்களுக்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டு உள்ளார்.
இதன எதிரொலியாக, சென்னையில் பல்வேறு பகுதியில் உள்ள உணவகங்களில் உணவு பாதுகாப்புத் துறையினர் ஆய்வு செய்தனர். மேலும் அந்த ஆய்வில், இதுவரை 33 கடைகளில் உணவு பாதுகாப்பு அலுவலர்களால் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த நிகழ்வில் ரசாயனம் சேர்க்கப்பட்ட சிக்கன் இறைச்சி மற்றும் உண்ணத் தகாத கெட்டுப்போன இறைச்சி மற்றும் உணவுப் பொருட்கள், பிரியாணி, சிக்கன் 65 என 355 கிலோ எடையுள்ள உணவுப் பொருட்கள் பறிமுதல் செய்து கிருமி நாசினி கொண்டு அழிக்கப்பட்டது.