சாம்பாரில் பிளாஸ்டிக் காகிதம் சென்னை:தியாகராய நகரில் விருதுநகர் அய்யனார் பிரபல செட்டிநாடு அசைவ உணவகம் செயல்பட்டு வருகிறது. இதில் இன்று (ஜூலை 31) மதியம் 1.30 மணியளவில் தகவல் தொழில்நுட்பத்துறையில் பணிபுரியும் பெண் ஒருவர் உள்பட 15க்கும் மேற்பட்டோர் மதிய உணவு அருந்த சென்றனர். அங்கு சிக்கன் பிரியாணி, மட்டன் உள்ளிட்ட அசைவ சாப்பாடுகளை ஆர்டர் செய்து சாப்பிட்டனர்.
இதில் சம்பந்தப்பட்ட ஐடி பெண் ஊழியர் உள்பட ஆறு பேருக்கு உடனடியாக வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதனால், உணவு அருந்தியவர்களுக்கு உணவின் தரம் குறித்து கேள்வி எழுந்தது. எனவே, உடனடியாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தனர்.
தகவலின் பேரில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் மதியம் சரியாக 3 மணிக்கு உணவகத்தில் ஆய்வு நடத்தினர். பாதிக்கப்பட்டவர்கள் அருந்திய உணவு மற்றும் உணவு தயாரிக்கும் கூடத்தில் நேரில் ஆய்வு நடத்திய அதிகாரிகள் இறைச்சி கெட்டுப் போய் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
மேலும், அங்கிருந்த சாம்பார் பாத்திரத்தை திறந்தபோது அதில் பிளாஸ்டி கவர் ஒன்று மிதந்துள்ளது. இதனைக் கண்ட அதிகாரிகள், கடை ஊழியர்களிடம் சரமாரியாக கேள்வி எழுப்பினர். தொடர்ந்து, அங்கிருந்த உணவுகளை தட்டில் வைத்து அங்கிருந்த ஊழியரிடம் கொடுத்து சாப்பிடக் கூறினர்.
பிரபல உணவகத்தில் கெட்டுப்போன இறைச்சி தொடர்ந்து சம்பந்தப்பட்ட உணவகத்தை தற்காலிகமாக மூடக்கோரியும், உரிய விளக்கம் கேட்டு நோட்டீஸும் வழங்கினார். உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஆய்வுக்காக உணவகத்தில் இருந்து உணவை எடுத்துச் சென்று உணவக உரிமையாளருக்கு எச்சரிக்கை விடுத்துச் சென்றனர்.
உணவு அருந்தும்போதே இறைச்சி கெட்டுப் போய் இருப்பது தெரியவந்ததாகவும், உணவு அருந்தும்போது அடுத்தடுத்து வாந்தி மயக்கம் ஏற்பட்டதால் சந்தேகத்தின் அடிப்படையில் புகார் தெரிவிக்கப்பட்டதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க:SALEM - ரூ.34 ஆயிரம் மதிப்புள்ள கெட்டுப்போன இறைச்சி பறிமுதல்!