சென்னை: அலுவலகத்தில் உள்ள உணவு பாதுகாப்புத் துறை வாணியர் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய, உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, மத்திய அரசின் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தமிழ்நாட்டில் தரமற்ற அரிசி வழங்குவதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
இது வருத்தம் அளிக்கிறது. ஞாயிற்றுக்கிழமை இன்று அனைத்து ரேஷன் கடைகளும் விடுமுறை. அப்படி இருக்கும்பொழுது இவர் எந்த ரேஷன் கடைக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார் என்பது தெரியவில்லை. அவரின் கட்சிக்காரர்கள் கூறுவதை வைத்து உண்மைக்குப் புறம்பாகக் குற்றம் சாட்டியுள்ளார் என்பது வருத்தம் அளிக்கிறது.
தமிழ்நாட்டில் 712 அரிசி ஆலைகள் மூலம் மக்களுக்குத் தரமான அரிசி அரவைச் செய்யப்பட்டு வழங்கி வருகிறோம். மேலும் இந்திய உணவு பாதுகாப்பு கழகத்தின் அதிகாரிகள் அரிசி ஆலைகளில் உற்பத்தி செய்யப்படும் அரிசியின் தரத்தை ஆய்வு செய்கின்றனர். அவ்வாறு ஆய்வு செய்யப்படும் தரமான அரிசிகளை மட்டுமே மக்களுக்கு விநியோகம் செய்து வருகின்றோம்.
ஏற்கனவே தமிழ்நாட்டிற்கு வந்த மத்திய அமைச்சர்கள் ரேஷன் கடைகளைப் பார்வையிட்டுச் சிறப்பாகச் செயல்படுகிறோம் எனக் கூறியுள்ளனர். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மத்திய அமைச்சர்களை அழைத்து வந்து தமிழ்நாட்டில் அரசின் திட்டங்களை ஆய்வு செய்து அதில் உள்ள குறைகளை மக்களுக்குக் கூறுவோம் என ஏற்கனவே தெரிவித்திருந்த நிலையில், அரசியல் செய்ய வேண்டும் என்பதற்காக ஒன்றிய அமைச்சர் பியூஸ் கோயல் உணவுத்துறை அதிகாரிகளுடன் இன்று ஆய்வுக் கூட்டம் நடத்தும் நிலையில் , பொதுவெளியில் இது போன்ற குற்றச்சாட்டுக் கூறியது வருத்தம் அளிக்கிறது.