தமிழ்நாடு

tamil nadu

"மாட்டிறைச்சிக்கென்று பிரத்யேகமாக ஒரு உணவுத் திருவிழா" - மாட்டிறைச்சி சங்கம்!

By

Published : Oct 8, 2022, 10:36 PM IST

உணவுத் திருவிழாவில் மாட்டிறைச்சி கடைக்கு தொடர்ந்து அனுமதி மறுக்கப்படுவதால், மாட்டிறைச்சிக்கென்று பிரத்யேகமாக ஒரு உணவுத் திருவிழா நடத்த இருப்பதாக சென்னை மாட்டிறைச்சி சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

Food
Food

சென்னை:சென்னை மாட்டிறைச்சி வியாபாரிகள் சங்கத் தலைவர் எத்திராஜ், செயலாளர் சம்பத் உள்ளிட்டோர் சென்னை சேப்பாக்கம் பத்திரிகையாளர் மன்றத்தில் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது பேசிய அவர்கள், "மத்திய அரசு, மாநில அரசு மற்றும் இறைச்சி வியாபாரிகளின் கருத்தைக் கேட்காமல் விலங்குகள் பாதுகாப்பு சட்டத்தில் சில திருத்தங்களை கொண்டு வந்துள்ளது. இந்த சட்ட திருத்தத்தில் மாடுகளை ஏற்றி வரும் வாகனத்தின் நீளம், உயரம் குறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஆனால், தமிழ்நாட்டில் அதுபோன்று வாகனங்கள் இல்லை.

ஒரு மாட்டை விற்பதற்கு முன் மாட்டின் பிறப்புச் சான்றிதழ் இருக்க வேண்டும் எனவும் அந்த சட்டத்தில் தெரிவித்திருக்கிறது. இது போன்ற சட்டத் திருத்தத்தால் வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்படுகிறோம். இதுகுறித்து பல முறை மாநில அரசுக்கு தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, இந்த சட்டத்திருத்ததை கண்டித்து வரும் 10ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடந்த உள்ளோம்.

மாட்டை வெளியில் வெட்டி விற்பனை செய்வோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் சிலர் வழக்கு தொடர்ந்துள்ளனர். ஆனால், வெளியில் வெட்டாமல் இருக்க, மாநில அரசு இதுவரை ஒரு அறுவை கூடம் கூட புதிதாக கட்டவில்லை. மாநிலம் முழுவதும் 8 அறுவைக்கூடங்கள்தான் உள்ளன. திமுக தேர்தல் வாக்குறுதியின்போது மாட்டிறைச்சி கூடத்தை பராமரிப்போம் என்று தெரிவித்திருந்தார்கள். எனவே அந்த வாக்குறுதியை அவர்கள் நிறைவேற்ற வேண்டும்.

பசு காவலர்கள் என்று கூறிக்கொள்ளும் சிலர் மாட்டை ஏற்றி வரும் வண்டிகளை பிடித்து அவர்களிடம் இருந்து பணம் பறித்து வருகின்றனர். குறிப்பாக இந்து முன்னணி கட்சியினர், 20,000 முதல் 30,000 ரூபாய் வரை செலுத்தினால்தான் வண்டியை விடுவோம் என்று கூறி மிரட்டுகிறார்கள். இதற்கு காவல்துறையும் துணைபோகிறது.

சென்னையில் உள்ள மாநகராட்சி அறுவை கூடத்தில் மாநகராட்சி டெண்டர் விடுகின்றனர். அதை ஏன் மாநகராட்சி எடுத்து நடத்தக் கூடாது? மாநகராட்சி என்ன தொகை நிர்ணயிக்கிறதோ அதை செலுத்த நாங்கள் தயாராக இருக்கிறோம். உணவுத் திருவிழாவின்போது மாட்டிறைச்சி கடைக்கு அனுமதி மறுப்பது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இது கண்டனத்துக்குரியது. இதனால் மாட்டிறைச்சிக்கென்று பிரத்யேகமாக நாங்கள் ஒரு உணவுத் திருவிழாவை நடத்த இருக்கிறோம்" என்று தெரிவித்தனர்.

இதையும் படிங்க:‘1 மணி நேர மழைக்கே நிலைகுலைந்த சென்னை, நடவடிக்கை தேவை’ - கமல்ஹாசன்

ABOUT THE AUTHOR

...view details