சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று(ஜூன் 15) பட்டினப்பாக்கத்தில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனின் நேற்றைய பேட்டிக்கு பதிலளிக்கும் வகையில் செய்தியாளர்களைச் சந்தித்த ஜெயக்குமார், "மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விரக்தியின் உச்சத்தில் பேசுகிறார். ஒட்டுமொத்தமாக தமிழக அரசின் விரக்தியின் வெளிப்பாடாக அந்தப் பேட்டியைக் காண முடியும். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் அரசு மீது புழுதியைவாரி தூற்றியதோடு அல்லாமல், பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்துள்ளதால் எங்களுடைய மேலான பதிலை எடுத்துச் சொல்ல கடமைப்பட்டுள்ளோம்.
இருண்டவன் கண்ணுக்கு தெரிவதெல்லாம் பேய் என்ற அடிப்படையிலும், புலிக்கு பயந்தவர்கள் எல்லாம் என் மீது படுத்துக் கொள்ளுங்கள் என்பது போலவும்தான் விடியா அரசின் அமைச்சராக இருக்கின்ற சுப்பிரமணியனுடைய பேட்டி இருந்தது. செந்தில் பாலாஜி போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தபோது, நடந்த ஊழல் என்று சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். ஆம், செந்தில்பாலாஜி அமைச்சராக இருந்தபோது தவறு நடந்ததாக அறிந்தவுடன் ஜெயலலிதா உடனடியாக அவரை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கினார். மேலும், செந்தில்பாலாஜி மீது கொடுக்கப்பட்ட புகாரில் சட்டப்படியான நடவடிக்கை எடுத்தவர் ஜெயலலிதா. ஆனால், அவரை அமைச்சராக்கி அழகு பார்த்தது திமுக அரசு. நிர்வாகத் திறனற்றவர் உங்களுடைய முதலமைச்சர் ஸ்டாலின்தான்.
தன்னை அமைச்சராக்கிய விடியா திமுக அரசின் முதலமைச்சருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் தக்க விசுவாசத்தை கடந்த இரண்டு ஆண்டுகளாக காட்டியவர், செந்தில்பாலாஜி. கனிமொழி மற்றும் ராஜா ஆகியோரை 2ஜி ஊழல் வழக்கில் கைது செய்யும்போது அமைதியாக இருந்த திமுக, தற்போது ஒரு ஊழல் அமைச்சரை உச்ச நீதிமன்ற ஆணையின்படி அமலாக்கத்துறை விசாரணை நடத்தி கைது செய்தபோது, முதலமைச்சர் முதல் அனைத்து அமைச்சர்களும் இரவெல்லாம் தூங்காமல் மருத்துவமனையைச் சுற்றி சுற்றி வருகிறார்கள். இதைப் பார்க்கும்போது செந்தில்பாலாஜி அமலாக்கத்துறையினரிடம் தங்களை மாட்டிவிடுவாரோ என்று அஞ்சி நடுங்குவது வெட்ட வெளிச்சமாகத் தெரிகிறது என்று மக்கள் பேசிக்கொள்கிறார்கள்" என்று கூறினார்.