சென்னை:இயக்குநர்லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த விக்ரம் திரைப்படம் வெளியாகி இன்றுடன் (ஜுன் 3) ஓராண்டு நிறைவடைந்தது. கமல்ஹாசன் இந்திய சினிமாவின் பிதாமகன் என போற்றப்படுபவர். அவரது ஒவ்வொரு படங்களும் ஏதாவது ஒரு புதுமையான அனுபவத்தை படம் பார்க்கும் ரசிகர்களுக்கு கொடுக்கும்.
அப்படி கிட்டத்தட்ட தனது வாழ்நாள் முழுவதும் சினிமாவுக்காக அர்ப்பணித்துக் கொண்டவர், கமல்ஹாசன். ஆனாலும், அவரது படங்கள் சமீப காலமாக எந்த வித தாக்கத்தையும் ஏற்படுத்தாமல் வணிக ரீதியான வெற்றியையும் பெற தவறின. இந்த நிலையில் தான், கடந்த ஆண்டு 2022இல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் ‘விக்ரம்’ என்ற படத்தில் நடித்தார்.
இப்படம் வெளியாகி இதுவரை இல்லாத அளவில் கமலுக்கு மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுத் தந்தது. லோகேஷ் கனகராஜ் எந்தவித சினிமா அனுபவமும் இல்லாமல் முதன் முதலாக மாநகரம் என்ற படத்தை இயக்கினார். அப்படம் எதிர்பாராத வெற்றியை பெற்றதுடன், லோகேஷ் கனகராஜ் யார் என்று தமிழ் திரையுலகினரை தேட வைத்தது.
அதனைத் தொடர்ந்து, முன்னணி நடிகரான கார்த்தியை வைத்து கைதி என்ற படத்தை இயக்கினார். இப்படம் இதுவரை இருந்த சினிமா மொழியை மாற்றி அமைத்ததுடன் வெற்றியும் பெற்றது. இதன் மூலம் முன்னணி இயக்குநராக உருவெடுத்த லோகேஷ் கனகராஜ் அடுத்து விஜய்யை வைத்து மாஸ்டர் என்ற படத்தை இயக்கினார். அதுவும் பாக்ஸ் ஆபிஸ் வசூலை அள்ளியது.