சென்னை:ரமணியம்மாள் என்ற பெயர் மறந்து ராக்ஸ்டார் ரமணியம்மாள் என்று ரசிகர்களால் அழைக்கப்படுபவர் பிரபல நாட்டுப்புற பாடகி ரமணியம்மாள் (69). நாட்டுப்புற பாடகியான இவர் ஆரம்ப காலத்தில் தமிழ் சினிமாவில் சில படங்களில் பாடியுள்ளார். அதில் குறிப்பாக பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் பரத் நடித்த "காதல்" படத்தில் தண்டட்டி கருப்பாயி என்ற பாடலை பாடியிருக்கிறார். அந்த பாடல் மிகப் பெரிய வெற்றியை பெற்றது. அதனை தொடர்ந்து சில படங்களில் பாடியுள்ளார் ரமணியம்மாள்.
ஆனால் இவருக்கு மிகப் பெரிய பெயரை பெற்றுத்தந்தது தனியார் தொலைக்காட்சியில் நடத்தப்பட்ட ஒரு பாடல் நிகழ்ச்சி தான். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று தனது இனியமையான குரலால் ரசிகர்களை கட்டிப்போட்டார். அந்த நிகழ்ச்சியில் தான் அவருக்கு ராக்ஸ்டார் என்று பெயர் வழங்கப்பட்டது. அதில் இருந்து ராக்ஸ்டார் ரமணியம்மாள்(rockstar ramani ammal) என்றே அழைக்கப்பட்டார். அந்த நிகழ்ச்சி கொடுத்த பெயர் மற்றும் புகழால் சினிமாவில் மீண்டும் பாடல்கள் பாட வாய்ப்பு கிடைத்தது.
சூர்யா நடித்த "காப்பான்" படத்தில் இவர் பாடிய பாடல் வெற்றி பெற்றது. காத்தவராயன், சண்டக்கோழி 2, ஜுங்கா உள்ளிட்ட படங்களிலும் பாடல் பாடியுள்ளார். சமீபத்தில் வெளியான யோகி பாபு நடித்த பொம்மை நாயகி படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார் ரமணியம்மாள். சிறு வயதிலேயே நன்றாக பாடும் திறமை கொண்ட இவர் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகையாவார். எம்ஜிஆரின் தத்துவப் பாடல்களை பாடித்தான் தனது இசை திறமையை வளர்த்துக் கொண்டதாக ரமணியம்மாள் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
இந்த நிலையில் சில மாதங்களாக உடல்நலக் குறைவுவால் இருந்த ரமணியம்மாள் இன்று காலை திடீரென உயிரிழந்தார். இதனையடுத்து அவரது இறுதிச் சடங்குகள் இன்று மாலை அவரது வீட்டில் நடைபெற உள்ளன. ரமணியம்மாள் மறைவுக்கு திரைத்துறையினர் மற்றும் அவரது இசை ரசிகர்கள் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். ரமணியம்மாளுக்கு 8 பிள்ளைகள் உள்ளனர். அவர்கள் அனைவருக்கும் திருமணமாகிவிட்டது. தற்போது தனது மகன் மற்றும் பேரக் குழந்தைகள் உடன் வசித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மே.வங்கத்தில் தொடரும் வன்முறை! இணையதள சேவை முடக்கம் -அவசரநிலை?