சென்னையை ஒட்டியுள்ள கடற்கரைப்பகுதி பட்டினப்பாக்கம். மீனவர்கள் மிகுதியாக வாழும் இப்பகுதியில், கடந்த சிலநாட்களாக கடற்கரை முழுதும் நுரை நிறைந்து காணப்படுகிறது. எங்கு பார்த்தாலும் பஞ்சு மூட்டைகளை பிரித்து கொட்டியதுபோல் பெரிய அளவிலான நுரைப்பஞ்சுகள் கடற்கரைப்பகுதி முழுதும் பரவிக்கிடக்கிறது. கடலிலிருந்து வெளியேற்றப்படும் இந்த நுரை, காற்றில் பறந்து அருகில் உள்ள வீடுகளுக்குள் புகுவதால் அப்பகுதி மக்கள் அவதியடைந்துள்ளனர். அலைகள், நுரையை வெளியேற்றுவது பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்துள்ளதாகவும், ஆனால், தற்போது நுரை வெளியேறிவருவது அச்சத்தை ஏற்படுத்துவதோடு மட்டுமின்றி தொழிலும் செய்யமுடியாத சூழல் உருவாகியுள்ளதாக அப்பகுதி மீனவர்கள் கூறுகின்றனர்.
பொதுவாக, கடல் தனக்குள் சேரும் கழிவுகளை அலையினூடாக வெளியேற்றிவிடும் தன்மை கொண்டது. அதைப்போலவே, இந்த நுரைவெளியேற்றம் இருந்திருக்கலாம் என்றிருந்தாலும், சாதாரணமாக இருந்தக் கடலில் திடீரென ஏற்பட்டுள்ள இந்த மாற்றம், அப்பகுதியினரை அச்சத்தில் உறைய வைத்துள்ளது.