சென்னை:தமிழ்நாடு முழுவதும் பருவ மழை தீவிரமடைந்து, தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் சென்னை விமான நிலையத்தில் இருந்து விமானங்களில் செல்ல வேண்டிய பயணிகள் வருவதற்கும், சென்னை விமான நிலையத்திற்கு விமானங்கள் வந்தடைவதற்கும் தாமதமாகின்றன.
அதேநேரம், விமானத்தில் ஏற்றப்படும் பயணிகளின் உடைமைகள், விமானங்களில் பயணிகளுக்கு கொடுக்கும் உணவுப் பொருட்களை விமானங்களில் ஏற்றுவது போன்ற பணிகளை மேற்கொள்வதிலும் சுனக்கம் ஏற்படுகிறது. மேலும், சில விமானங்களை இயக்க வேண்டிய விமானிகள், விமானப் பணியாளர்கள், மழை காரணமாக தாமதமாக வருவதாலும், சென்னை விமான நிலையத்தில் உள்நாடு மற்றும் சர்வதேச விமான முனையங்களில், இன்று அதிகாலையில் இருந்து புறப்பட வேண்டிய விமானங்கள், சுமார் ஒரு மணி நேரம் வரை தாமதமாக புறப்பட்டுச் சென்றன.
சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூர், இலங்கை, குவைத், பிராங்பார்ட், பக்ரைன், துபாய், சார்ஜா, தோகா, அடிஷ் அபாபா, அபுதாபி, மஸ்கட், லண்டன் ஆகிய இடங்களுக்கு புறப்பட வேண்டிய 12 சர்வதேச விமானங்கள் மற்றும் திருவனந்தபுரம், மும்பை, டெல்லி, விஜயவாடா, விசாகப்பட்டினம், புவனேஸ்வர் உள்ளிட்ட 10 உள்நாட்டு விமானங்கள் என மொத்தம் 22க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாக புறப்பட்டுச் சென்றன.
இதற்கிடையே இன்று அதிகாலை 5.45 மணிக்கு சென்னையில் இருந்து தூத்துக்குடி செல்ல வேண்டிய இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானமும், காலை 9.15 மணிக்கு தூத்துக்குடியில் இருந்து சென்னை வர வேண்டிய இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானமும் ரத்து செய்யப்பட்டன. தென் மாவட்டங்களில் தொடர் கனமழை காரணமாக பயணிகள் எண்ணிக்கை குறைவாக இருப்பதால், இந்த விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: சேலம் அரசு மருத்துவமனையில் திடீர் தீ விபத்து.. மீட்பு நடவடிக்கைகள் என்னென்ன?