சென்னை: தமிழ்நாட்டில் கனமழை மற்றும் ரெட் அலாா்ட் காரணமாக, சென்னை- மதுரை - சென்னை, மற்றும் தூத்துக்குடி - சென்னை ஆகிய 3 விமானங்கள் இன்று ரத்து. சென்னை - லண்டன் விமானம் 6 மணி நேரம் தாமதம். மேலும் திருச்சி, சீரடி, கோவா, மும்பை, ஹாங்காங் விமானங்களும் தாமதம். சென்னையில் இருந்து இன்று மாலை 5:10 மணிக்கு மதுரை செல்ல இருந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானமும், அதே போல் மதுரையிலிருந்து இரவு 8:30 மணிக்கு சென்னை வந்து சேர வேண்டிய இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானமும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
அதேபோல் தூத்துக்குடியில் இருந்து இன்று மாலை 5:30 மணிக்கு சென்னை வந்து சேர வேண்டிய இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானமும் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் சென்னையில் இருந்து லண்டன் செல்லும் பிரிட்டிஷ் ஏர்வேஸ் பயணிகள் விமானம், வழக்கமாக லண்டனிலிருந்து அதிகாலை 5:30 மணிக்கு சென்னை வந்துவிட்டு, மீண்டும் சென்னையில் இருந்து காலை 7:30 மணிக்கு லண்டன் புறப்பட்டு செல்லும்.
ஆனால் சென்னையில் தொடர்ந்து கனமழை காரணமாக மோசமான வானிலை நிலவுவதால், பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் நிறுவனம், இன்று காலையில் புறப்பட வேண்டிய விமானத்தை 6 மணி நேரம் தாமதமாக, இன்று பகல் 1:30 மணிக்கு சென்னையில் இருந்து லண்டன் புறப்படுவதாக, பயணத் திட்டத்தை மாற்றி அமைத்தது.