நாடெங்கும் தீபாவளி பண்டிகை விடுமுறை மற்றும் சனி, ஞாயிறு வார விடுமுறை என தொடர்ச்சியாக வருவதையடுத்து சென்னை மற்றும் புறநகர் பகுதியில் வசிக்கும் வெளியூர் மக்கள் ஒட்டுமொத்தமாக தங்களின் சொந்த ஊர்களுக்கு தீபாவளியை கொண்டாடுவதற்காக செல்கின்றனர். இதனால் பேருந்து நிலையம், ரயில் நிலையம் ஆகியவைகளில் பயணிகள் கூட்டம் நிரம்பியுள்ளன.
இதையடுத்து சிறப்பு பேருந்துக்கள், சிறப்பு ரயில்கள் விடப்பட்டுள்ளன. ஆனாலும் பயணிகள் கூட்டம் அதிகமாக உள்ளது. இறுதி நேரத்தில் பயணிகள் பலா் விமானங்களில் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு செல்கின்றனர். இதனால் பயணிகள் ஒட்டுமொத்தமாக சென்னை விமான நிலையத்தை நோக்கி படையெடுப்பதால் சென்னை விமான நிலையத்தில் பயணிகள் கூட்டம் நிறைந்து வழிகிறது.
முன்னதாக, பயணிகளின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள், சிறப்பு ரயில்கள் விடப்பட்ட நிலையிலும் இறுதி நேரத்தில் ஏராளமான பயணிகள் கூட்டம் கூட்டமாகக் கிளம்பி செல்கின்றனர். இதன் ஒருபகுதியாக, சென்னை விமானநிலையத்திலும் பயணிகள் கூட்டம் குறைந்த பாடில்லை. சென்னை விமான நிலையத்தில் வழக்கமாக, ஒரு நாளைக்கு 35 ஆயிரத்திலிருந்து 40 ஆயிரம் வரை பயணிகள் பயணித்துக் கொண்டு இருந்த நிலையில் தற்போது, 50 ஆயிரத்தையும் கடந்து வருகிறது.
சென்னை விமான நிலையத்தில் அதிகமாகும் பயணிகள் கூட்டத்தையொட்டி, விமானங்களின் பயண கட்டணமும் பல மடங்கு உயர்ந்துள்ளது. தீபாவளி இந்தியா முழுவதும் கொண்டாடப்படுவதால் சென்னையில் உள்ள வடமாநிலத்தவா்கள் பெருமளவு விமானங்களில் செல்வதால் வட மாநிலங்களுக்கு செல்லும் விமான கட்டணங்கள் மூன்று மடங்கு வரை உயர்ந்துள்ளன.
- சென்னை-டெல்லி இடையே வழக்கமான கட்டணம் ரூ 6,000. தற்போது ரூ.12,000, ரூ18,000.
- சென்னை கொல்கத்தா வழக்கமான கட்டணம் ரூ. 6,500. தற்போது ரூ.15,000-ரூ.17,000.
- சென்னை புவனேஸ்வர் வழக்கமான கட்டணம் ரூ.6,000. தற்போது ரூ.11,000- ரூ.13,000.
- சென்னை-கொச்சி வழக்கமான கட்டணம் ரூ. 3,500. தற்போது ரூ.9,000.
- சென்னை திருவனந்தபுரம் வழக்கமான கட்டணம் ரூ. 5,000. தற்போது ரூ. 12,000,-21,000.